Tamilnadu
தமிழகத்தில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்ற நிர்பந்திப்பதா? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-2021-ஆம் ஆண்டில் இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாகவும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஏ.ஐ.சி.டி.இ. தரப்பில் இரு படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டுமெனவும், இனி சேர்க்க வாய்ய்பில்லை என தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு நிதி உதவி செய்யும் படிப்புகளுக்கு தமிழகத்தில் உள்ள வேறு சில பல்கலைகழகங்கள் மத்திய இட ஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கையை நடத்தியுள்ளதாகவும், அண்ணா பல்கலைகழகம் மட்டும் மாணவர் சேர்க்கையை நிறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி குறுக்கிட்டு, மாணவர்களுக்காக பல பல்கலைக்கழகங்கள் புதிய படிப்புகளை உருவாக்கி வரும்போது, அண்ணா பல்கலைகழகம் மட்டும் 25 ஆண்டுகளாக நடக்கும் படிப்பை நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
யுஜிசி விதிகளில் மாநில இட ஒதுக்கீட்டை பின்பற்ற அறிவுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றும்படி மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறதா என மத்திய அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு தரப்பில் அப்படிப்பட்ட எண்ணம் ஏதுமில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி, எந்த இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது என தமிழக அரசிற்கு கடிதம் எழுதியது ஏன் என அண்ணா பல்கலைகழகத்திற்கும் கேள்வி எழுப்பினார். மேலும், மத்திய அரசு இடஒதுக்கீட்டை பின்பற்றும்படி எழுதப்பட்ட கடிதம் தான் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் நடைபெற்றுள்ள அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என நீதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.
நிறுத்தப்பட்ட படிப்புகள் மூலம் எத்தனை நிபுணர்கள் உருவாகியுள்ளனர் என ஆய்வு செய்து தெரிவிக்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளார். எம்.டெக். மாணவர் சேர்க்கை விவகாரம் குறித்த தெளிவான விளக்கத்துடன் வரும்படி மத்திய அரசிற்கு அறிவுறுத்தியும், யுஜிசி-யை வழக்கில் எதிர் மனுதாரராக இணைத்தும் உத்தரவிட்டுள்ளனர்.
இரு பிரிவுகளில் தலா 45 மாணவர்களை அனுமதிப்பதற்கான பேச்சுவார்த்தையை ஏ.ஐ.சி.டி.இ-யுடன் உடனடியாக மேற்கொள்ளும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் உத்தரவிட்டு வழக்கை நாளை (பிப்ரவரி 16) ஒத்திவைத்துள்ளார்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு