Tamilnadu

“இதுகூட தெரியாமல் 4 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?” : எடப்பாடி அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்!

“அம்மையார் ஜெயலலிதா தொடங்கிய திட்டத்தையே மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கும் திரு. பழனிசாமி, இதுகூட தெரியாமல் நான்கு ஆண்டுகளாக கோட்டையில் என்ன செய்து கொண்டிருந்தார்?”

"ஊழல் கறை படிந்த இருவரது கரங்களை தூக்கி பிடித்துக் காட்டியிருப்பதன் மூலம் அவர்கள் தவறுகளுக்கு நானும் பொறுப்பு என்று ஒத்துக் கொள்கிறாரா அல்லது நான் சொல்வதைத் தான் இவர்கள் செய்கிறார்கள் என்கிறாரா பிரதமர்”

- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.

இன்று (14-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் – கீழையூர் ஒன்றியம், வேளாங்கண்ணி – வேதாரண்யம் சாலை, பிரதாபராமபுரம் ஊராட்சியில் நடைபெற்ற, திருவாரூர் – நாகை தெற்கு கழக மாவட்டங்களுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் பேசியதன் விவரம் வருமாறு:

மேரி என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

மேரி அவர்கள் இங்கு எவ்வாறு பேசினார்கள் என்று தெரியும். இங்கே மனுவில் கூட அதை குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள். அதை படிக்கும் போது என்னுடைய கண்கள் கலங்குகிறது. கணவனை இழந்து, கையில் குழந்தையோடு வாழ வழியில்லாமல் சகோதரி மேரி அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் சென்று பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லாமல் தீக்குளிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு உதவி செய்கிறோம் என்று உறுதியளித்த அ.தி.மு.க.வினர் இவரிடமும் மோசமான முறையில் நடந்திருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு காட்டி இருக்கிறார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்களை தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன். பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். கீழ்வேளூர் தொகுதியில்தான் தலைவர் பிறந்த திருக்குவளை உள்ளது. அந்த உணர்வோடு கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். மன உறுதியோடு இருங்கள். நாங்கள் இருக்கிறோம். இந்த ஸ்டாலின் இருக்கிறான். உங்களுக்கு சகோதரனாக இருந்து உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். இந்த 3 மாதங்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள். என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறதோ அதை எல்லாம் நிச்சயமாக தீர்த்து ஆனால் அதே நேரத்தில் உங்கள் மனசாட்சியற்ற மிருகங்களுக்கு நிச்சயமாக உரிய தண்டனையை வழங்குவோம் என்பதை நான் சொல்கிறேன். அதுமட்டுமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர் - முன்னாள் அமைச்சர் மதிவாணன் அவர்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். கவலைப்படாதீர்கள். இன்றோ நாளையோ அவர் உங்களை வந்து சந்திப்பார். சந்தித்து நிச்சயமாக என்ன உதவி செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள். கவலைப்படாதீர்கள்.

இனியவன் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

தலைவர் பிறந்த இந்த ஊரில் சட்டக்கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக அது பரிசீலிக்கப்படும். கஜா புயல் நேரத்தில் பொது நிவாரணத்திற்காக போராடிய இளைஞர்களை எல்லாம் இந்த ஆட்சி பல வழக்குகளை போட்டு இருக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர் தான் நம்முடைய இனியவன். ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்றது. கூடங்குளம் போராட்டம் நடைபெற்றது. அப்போதெல்லாம் கடுமையான பிரிவுகளில் வழக்குப் போட்டு தொல்லை கொடுத்திக்கிறார்கள். இந்த அவசரத்தை இந்த அக்கறையை அந்த நிவாரண நிதியை வாங்குவதில் மத்திய அரசிடம் மோடி இடத்தில் போராடி இருந்தால் உங்களை பாராட்டி இருக்கலாம். சர்வாதிகார நோக்கில், ஆணவத்தின் உச்சியில் நின்று கொண்டு அரசு போட்டிருக்கும் பொய் வழக்குகளை நிச்சயமாக நீங்கள் சொன்னது போல நமது ஆட்சி வந்தவுடன் உடனடியாக திரும்பப் பெறப்படும் கவலைப்பட வேண்டாம்.

மாரிமுத்து என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

40 ஆண்டுகளாக பட்டாவுக்காக அந்த கிராம மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். இதனுடைய பின்னணி என்ன என்பதை தெரிந்து கொண்டு நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு உரிய நடவடிக்கை எடுப்போம். அதுமட்டுமில்லாமல் எப்படி இலவச மின்சாரம் கலைஞர் கொடுத்தாரோ அதேபோல மின் இணைப்பை விரைவுபடுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். நல்ல கருத்து தான். நல்ல யோசனை தான். எனவே அதுபற்றியும் தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீங்கள் நன்னிலத்தில் இருந்து வந்து பேசி இருக்கிறீர்கள். நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.க.வைச் சார்ந்த ஒருவர் இருக்கிறார். அவர் எம்.எல்.ஏ. மட்டுமல்ல, அமைச்சராகவும் இருக்கிறார். இந்த மாவட்டத்திற்கு பார்த்தீர்கள் என்றால் 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் இந்த தொகுதிக்கு, இந்த வட்டாரத்துக்கு, இந்த மாவட்டத்துக்கு என்ன செய்துள்ளார்கள் என்ற கேள்வியை சில வாரங்களுக்கு முன்னால் நடந்த ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தின் வாயிலாக நான் கேட்டேன். அவர்களால் பதில் தர முடியவில்லை.

அவர்களைப் பற்றி இந்த வட்டாரத்தில் சொல்லப்படும் பல்வேறு புகார்களை பட்டியலிட்டுக் காட்டினேன். அதற்கும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. மெளனம் சம்மதத்துக்கு அறிகுறியா? அமைதியாக இருப்பதால் அந்த குற்றச்சாட்டுகளை உண்மை தான் என்று ஒப்புக் கொள்கிறார்களா?

இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை. எனவே மாரிமுத்து அவர்கள் சொன்ன கோரிக்கை நிச்சயமாக பரிசளிக்கப்படும் என்று என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அகிலா என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

இவ்வளவு கஷ்டத்திலும் பெற்றோரை இழந்து இருக்கும் போதும் எம்.காம்., படித்திருப்பதற்கு உள்ளபடியே பாராட்டுக்குரியது. கவலைப்படாதீர்கள். 3 மாதங்கள் மட்டும் பொறுங்கள். வேலை வாய்ப்பி அலுவலகத்தில் பதிவு செய்திருப்பதாக சொன்னீர்கள். தி.மு.க. ஆட்சி வந்ததற்குப் பிறகு அதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை உறுதியாக நிச்சயமாக செய்வோம். கவலைப்படாதீர்கள். தைரியமாக இருங்கள்.

பிலிக்ஸ் ராஜ் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

கோவில்குளம் சரியாக பராமரிக்காத காரணத்தினால் சின்னஞ்சிறு வயதில் அவரது மகன் அதில் விழுந்து இறந்து விட்டார் என்று சொன்னார்கள். முதலில் அவருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இந்த லட்சணத்தில்தான் கோயில்களையும், அதற்கு சொந்தமான இடங்களையும் அ.தி.மு.க. அரசு பராமரித்து வருகிறது. இதை கவனிக்க வேண்டியது அந்தத் துறையின் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன். ஆனால் அவர் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அவர் கலெக்சன் - கமிஷன் - கரெப்சனில் தான் குறியாக இருக்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கோவில்கள் முன்பு தி.மு.க. ஆட்சியில் எப்படி இருந்ததோ அதை விட இன்னும் சீரோடும் சிறப்போடும் பராமரிக்கப்படும். அதேபோல பிலிக்ஸ் ராஜ் அவர்களின் மகன் இறந்ததற்கு இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

கடந்த ஜனவரி 25 ஆம் தேதி காலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களின் முன்னால் நான் ஒரு சபதம் எடுத்தேன். “மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு”. இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளித்த உறுதிமொழி! அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்காக இப்போது கீழ்வேளூருக்கு வந்துள்ளேன்.

ஜனவரி 25-ஆம் தேதி நான் இந்த உறுதிமொழியை முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் வைத்து இந்த உறுதிமொழியை எடுத்தேன். பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இலக்கணம் போல ஒரு உறுதிமொழியை கலைஞர் அவர்கள் உருவாக்கிக் கொடுத்தார்கள். அதுதான் ‘சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’ என்பதாகும். நான் சொன்னதைச் செய்வேன்! செய்வதைத் தான் சொல்வேன்!

மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செய்வதற்கான சபதத்தை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். அத்தகைய கோரிக்கையை 100 நாட்களில் நிறைவேற்றுவேன் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு கொடுத்துள்ளேன்.

உங்கள் கோரிக்கையை கேட்டு விட்டு நான் போய்விடவில்லை. எழுதி வாங்கி இருக்கிறேன். உங்களது மனுவை வாங்கிவிட்டும் நான் போய்விடவில்லை. என்னிடம் நீங்கள் மனு கொடுத்தற்கான ஒப்புதல் சான்றை உங்களுக்கு நான் கொடுத்திருக்கிறேன். இப்படிப்பட்ட ஒப்புதல் சான்றை நான் கொடுக்கிறேன் என்றால் என்னால் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால் தருகிறேன். என்னை நம்பி நீங்கள் வந்து மனு கொடுத்துள்ளீர்கள். உங்கள் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்.

இதில் ஒரே ஒருவருக்கு மட்டும் தான் சந்தேகம் வந்திருக்கிறது. அவர் பெயர் பழனிசாமி! அவருக்கு சந்தேகம் வரத்தான் செய்யும். ஏனென்றால் அவர் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாதவர். தனக்கு பதவி கொடுத்த சசிகலாவுக்கு கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்றாத பழனிசாமி, நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? நிறைவேற்ற மாட்டார்.

நாம் நடத்தும் கூட்டங்களுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். மனுக்களைக் கொடுக்கிறார்கள். இந்த மனுக்கள் உண்மையில் நிறைவேறும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இதை உளவுத்துறை கொடுக்கும் அறிக்கை மூலமாக பார்க்கும் பழனிசாமிக்கு பயமாக இருக்கிறது.

அதனால் தான் மக்களை விரக்தி அடைய வைக்கும் வகையில் பேசி வருகிறார். விரக்தி பழனிசாமிக்குத் தான் வந்துள்ளதே தவிர மக்களுக்கு வரவில்லை. ''3 மாதத்தில் முதலமைச்சர் என்று ஸ்டாலின் பேசி வருகிறார். முதலமைச்சர் பதவி என்ன கடையிலா கிடைக்கிறது?" என்று பழனிசாமி கேட்கிறார்.

3 மாதத்தில் ஆட்சி மாறப்போகிறது என்றால் கோடிக்கணக்கான மக்கள் தி.மு.க.வை வெற்றி பெற வைக்கத் தயாராகி விட்டார்கள் என்பதை உணர்ந்ததால் நான் சொல்கிறேன். கோடிக்கணக்கான மக்கள் பழனிசாமியை தோற்கடிக்கத் தயாராகி விட்டார்கள் என்பதால் நான் சொல்கிறேன். மக்கள் தான் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்கப் போகிறார்கள். கடையில் வாங்கப் போவதாக நான் சொன்னேனா?

கூவத்தூர் சாக்கடையில் ஊர்ந்து போய் பதவியை பெற்ற பழனிசாமிக்கு வேண்டுமானால் முதலமைச்சர் பதவி கடைச்சரக்காக தெரியலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமையப் போகும் மக்களாட்சியில் தான் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்று நான் சொல்லி வருகிறேன். பழனிசாமியைப் போல குறுக்கு வழியோ, ஊர்ந்து போயோ முதலமைச்சராக நினைப்பவன் அல்ல இந்த ஸ்டாலின்!

பொதுமக்களாகிய நீங்கள் உங்கள் குறைகளை வந்து சொல்கிறீர்கள். யாரும் பொய் சொல்லவில்லை. இந்த அரசாங்கம் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்த நிலையில் இங்கு வந்து உங்கள் குறைகளை எழுதிக் கொடுத்துள்ளீர்கள். அதில் சிலர் இங்கே பேசினீர்கள்.

ஒரு நல்ல அரசாங்கம், ஒரு நல்ல முதலமைச்சர் என்ன செய்ய வேண்டும்? இங்கு புகார் தரும் மக்களின் கவலைகளை உடனே தீர்க்கவேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை. மாறாக இந்த திட்டத்தையே குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

ஆரணியைச் சேர்ந்த எழிலரசி என்பவரது குடும்பத்துக்கு அரசாங்கம் சார்பில் 2 லட்சம் இழப்பீடு தந்திருக்க வேண்டும். அரசு இதுவரை தரவில்லை என்று ஆரணி கூட்டத்தில் என்னிடம் எழிலரசி சொன்னார். அன்று இரவே அவரது கணக்கில் 2 லட்சத்தை செலுத்திவிட்டது அரசு. அத்தோடு பிரச்சினையை முடித்திருக்க வேண்டும்.

தி.மு.க.வால் இது நடந்தது என்று வந்து விடக்கூடாது என்பதற்காக, முதலிலேயே பணத்தை கொடுத்துவிட்டோம் என்று செய்தி பரப்பியது அ.தி.மு.க. எதற்காக இந்த இழிவான எண்ணம்?

பணத்தை வாங்கிவிட்டு, அந்தப் பெண் வாங்கவில்லை என்று பேசியதாக பழனிசாமி சொல்லி இருக்கிறார். முதலமைச்சர் போன்ற பெரிய பொறுப்பில் இருப்பவருக்கு இது அழகா? ஸ்டாலினிடம் மனு கொடுப்பவர்கள் பொதுமக்கள் அல்ல என்று சொல்லி இருக்கிறார். நீங்கள் பொதுமக்கள் இல்லையா?

ஆட்சி முடிய இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில், இதுபோல நான் ஒரு திட்டத்தை அறிவிக்கப் போகிறேன், 1100 என்ற எண்ணுக்கு போன் செய்தால் உங்கள் குறை அனைத்தும் தீரும் என்றும் பழனிசாமி சொல்லி இருக்கிறார்.

4 ஆண்டு காலமாக இந்த ஞானோதயம் பழனிசாமிக்கு ஏன் வரவில்லை? இன்னும் சொன்னால், 1100 எண்ணுக்கு போன் செய்வது என்ற திட்டம் ஏற்கனவே ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம் தான்.

'மக்களின் குறைகளை உடனுக்குடன் களைய 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள்' என்று சொல்லி ‘அம்மா அழைப்பு மையம்’ என்ற திட்டத்தை 19.01.2016 அன்று முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். 1100 என்ற திட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தி இருந்தாலே இன்றைக்கு இந்தளவுக்கு மனுக்கள், புகார்கள், கோரிக்கைகள் வந்திருக்காதே!

இந்த அரசாங்கம் செயல்படவில்லை என்பதால் தானே இத்தனை ஆயிரம் மக்கள் வந்து மனுக்கள் கொடுக்கிறார்கள். ஜெயலலிதா ஆரம்பித்த திட்டம் என்பதே தெரியாமல், தான் அறிவிக்கப் போவதாக பழனிசாமி சொல்கிறார் என்றால் அவர் கோட்டையில் உட்கார்ந்து 4 ஆண்டு காலம் என்ன செய்து கொண்டு இருந்தார்? வெறுமனே கால் ஆட்டிக் கொண்டு இருந்தாரா?

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து மினி கிளினிக் ஆக்கியது போல, ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்ட தொலைபேசி சேவையை பேரை மாற்றி மக்கள் குறைதீர்க்கும் மேலாண்மை திட்டமாக மாற்றப் போகிறார் பழனிசாமி.

ஜெயலலிதா வைத்த பெயர், ‘அம்மா அழைப்பு மையம்‘. அம்மா பெயரையே காலி பண்ணப் போகிறாரா பழனிசாமி? முதலில் சின்னம்மா காலை வாரினார். இப்போது அம்மா பெயரை காலி பண்ணுகிறார். நம்பிக்கைத் துரோகமே உனது பெயர் தான் பழனிசாமியா என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

இன்று காலையில் சென்னையில் ஒரு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அவர்கள் வந்துள்ளார்கள். இனி அடிக்கடி வருவார். தேர்தல் வரப்போகிறது. அதனால் வரத்தான் செய்வார்.

காவிரி - குண்டாறு திட்டத்தை பிரதமர் தொடக்கி வைப்பார் என்று தமிழக அரசு சொன்னது. இதனைப் பார்த்த நம்முடைய பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அதிர்ச்சி அடைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள். 2009 ஆம் ஆண்டு கழக அரசால் தொடக்கி வைக்கப்பட்ட திட்டம் தான் காவிரி குண்டாறு திட்டம். அதை மறுபடியும் எதற்காக பிரதமர் தொடக்கி வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டார்கள். பிரதமரையே ஏமாற்றுவதற்கு பழனிசாமி திட்டமிட்டு இருந்தார்.

அண்ணன் துரைமுருகன் அறிக்கைக்குப் பிறகு அந்த பெயரை நீக்கிவிட்டார்கள். மெட்ரோ திட்டத்தின் விரிவாக்கத்தை தொடக்கி வைத்துள்ளார் பிரதமர். அது கலைஞர் அவர்களின் கனவுத் திட்டம். இன்றைக்கு சென்னையில் மெட்ரோ இரயில் ஓடுகிறது என்றால் அதற்கு கலைஞர் அவர்கள் தான் காரணம். அன்றைய தினம் துணை முதல்வராக இருந்த நான் இப்பணிகளை என்னுடைய நேரடி பார்வையில் அதை செயல்படுத்தினேன். நிதியுதவி பெறுவதற்காக கலைஞர் என்னை ஜப்பான் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

கலைஞர் பெயரையோ தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதையோ பிரதமர் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சென்னை மாநகர மக்களுக்கு, தமிழக மக்களுக்கு இது யாரால் வந்தது என்று தெரியும். ஆனால் இந்த விழாவுக்கு வந்த பிரதமர் மோடி அவர்கள், முதலமைச்சர் பழனிசாமியையும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தையும் கையை தூக்கி போஸ் கொடுத்துள்ளார்.

வலது பக்கம் பிடித்திருந்ததும் ஊழல் கை! இடது பக்கம் பிடித்திருந்ததும் ஊழல் கை! சென்னை வந்த பிரதமர் ஊழல் கறை படிந்த கரங்களை தூக்கி பிடித்துக் காட்டி இருக்கிறார். இதன் மூலம் பிரதமர் என்ன சொல்கிறார்.

இவர்கள் செய்த தவறுகளுக்கு நானும் பொறுப்பு என்று ஒத்துக் கொள்கிறாரா? நான் சொல்வதைத் தான் இவர்கள் செய்கிறார்கள் என்கிறாரா? என்ன சொல்கிறார் பிரதமர்?

2 பேரும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை ஒற்றுமைப்படுத்துகிறீர்களா? அது என்ன அரசியல் மேடையா? என்பதுதான் நான் எழுப்பும் கேள்வி.

10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருப்பது அ.தி.மு.க. அந்தக் கட்சியின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். இப்போதைய முதலமைச்சர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு - உச்சநீதிமன்ற தடையால் சி.பி.ஐ. விசாரணை தடைப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. பெரும்பாலான அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளது.

இவை அனைத்தையும் தொகுத்து 97 பக்க ஊழல் புகார் ஆளுநரிடம் ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறோம். இது முதல் பட்டியல் தான். இரண்டாவது பட்டியல் தயாராகி வருகிறது.

இன்றைக்கு இந்தியாவிலேயே ஊழல் கட்சி - ஊழல் ஆட்சி என்றால் அது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி தான். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க.தான்!

இவர்களிடம் உள்ள பணத்தை வைத்து தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டே போடலாம். தனது சுயநலத்துக்கான ஆட்சி இது. தங்களது குடும்பத்துக்காக, உறவினர்களுக்காக, பினாமிகளுக்காக அவர்கள் ஆட்சி நடத்துகிறார்களே தவிர மக்களுக்காக நடத்தவில்லை!

கழக ஆட்சி அமைந்ததும், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று நான் அறிவித்துள்ளேன். தந்தி தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் இதனை நான் குறிப்பிட்டேன். இதுபற்றி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்டுள்ளார்கள்.

முதலமைச்சர் என்ன சொல்லி இருக்க வேண்டும்? நான் ஊழல் எதுவும் செய்யாதவன், என் மடியில் கனமில்லை, அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை என்று சொல்லி இருக்க வேண்டும். ஸ்டாலின் அமைக்கும் தனிநீதிமன்றத்தால் எனக்கு எந்த பயமும் இல்லை என்று சொல்லி இருக்க வேண்டும்.

ஆனால் பழனிசாமி அப்படிச் சொல்லவில்லை. என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?

''ஏற்கனவே இது பற்றி விசாரிக்க மத்திய அரசே ஒரு தனிநீதிமன்றம் அமைத்துவிட்டதே? ஸ்டாலின் எதற்காக தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்?” என்று கேட்டுள்ளார் பழனிசாமி.

இப்போது மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றம் என்பது, இப்போது பதவியில் இருப்பவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் மன்றம். தேர்தல் முடிந்தால் பழனிசாமிக்கும், அவரது அமைச்சரவை சகாக்களும் சட்டமன்ற உறுப்பினர்களாகக் கூட இருக்க மாட்டார்கள். அதனால் தான் இவர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கத்தான் தனிநீதிமன்றம் அமைக்கப்படும் என்று சொன்னேன். இதுகூட பழனிசாமிக்கு புரியவில்லை. புரியவில்லையா? அல்லது புரியாதது மாதிரி நடிக்கிறாரா?

ஊழல் செய்து, ஊழல் செய்து அவரது தோல் தடித்துவிட்டது. கலெக்ஷன் வாங்கி வாங்கி அவரது கை கறை படிந்துவிட்டது. இந்தக் கறைபடிந்த கரங்களை தண்டிக்கும் தேர்தல் தான் இந்தத் தேர்தல். இத்தகைய ஊழல்வாதிகளுக்கு பாடம் புகட்டுங்கள்! கழக ஆட்சி மலரும், உங்கள் கவலைகள் யாவும் தீரும்! நன்றி. வணக்கம்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

Also Read: 4 ஆண்டுகளில் பாஜக அரசிடம் இருந்து எதைப்பெற்றார்? பட்டியலிட முடியுமா? - பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!