Tamilnadu

பிரதமர் மோடி வருகையை ஒட்டி ஒத்திகை நிகழ்ச்சியில் திடீர் விபத்து: அதிவேகமாக வந்த அரசு வாகனத்தால் பரபரப்பு!

பிரதமர் நரேந்திர மோடி நாளை ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில், சென்னை தீவுத்திடல் அருகே உள்ள அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் வந்து இறங்குகிறார்.

அங்கிருந்து கார் மூலம் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார், இதற்காக முன்னெச்சரிக்கையாக இன்று சென்னை தீவு திடல் ஐ.என்.எஸ் தளத்திலிருந்து பிரதமரை அழைத்து செல்லும் கான்வாய் மற்றும் பாதுகாப்பு வாகனங்களின் ஒத்திகை நடைபெற்றது.

அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கம் செல்லும் சாலை முழுவதும் இப்போதிருந்தே பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னை ஐ.என்.எஸ் வளாகத்தின் நுழைவு வாயிலில் பிரதமர் மோடி வருகையை ஒட்டி ஒத்திகை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட திடீர் விபத்தால் சலசலப்பு ஏற்படுள்ளது.

சென்னைச வியாசர்பாடி சர்மா நகர் பகுதியை சேர்ந்த சூசை நாதன் என்பவர் இன்று தனது வாடகை ஆட்டோவில் வார் மெமோரியல் அருகே இரு பெண்களை சவாரி ஏற்றிக்கொண்டு சேப்பாக்கம் செல்வதற்காக ராஜாஜி சாலையில் ஐ.என்.எஸ் அடையாறு நுழைவு அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னே வந்த இன்னோவா அரசு வாகனம் அதிவேகமாக கடந்து, இடது பக்கம் உள்ள நுழைவாயிலில் திரும்பியது. அப்போது நேராக சென்று கொண்டிருந்த ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்ததில் ஆட்டோவில் சவாரி செய்த இரு பெண்களில் ஒருவருக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய அரசு வாகனம் மின்னல் வேகத்தில் பறந்து ஐ.என்.எஸ் வளாகத்தினுள் சென்றது. அப்போது அங்கு இருந்த காவல் அதிகாரிகள் அதனை வேடிக்கை பார்த்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாதிக்கப்பட்டோரை சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் ஆட்டோவின் வலது பக்கம் லேசாக சேதமடைந்துள்ளதோடு, ஆட்டோ ஓட்டுனருக்கும் பின் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வருகைக்காக ஒத்திகை நடக்கும்போது சில நொடி நேரத்தில் இந்த நிகழ்வு நடந்ததால் அங்கு இருந்த காவலர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

Also Read: “சீரழிந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : மோடி அரசுக்கு டி.ஆர்.பாலு கேள்வி!