Tamilnadu

“அவதூறு வழக்குகளை திசைதிருப்ப முயலும் அ.தி.மு.க அரசு” - நீதிமன்றத்தில் தி.மு.க தலைவர் தரப்பு கண்டனம்!

தன் மீதான அவதூறு வழக்குகளை திசைதிருப்ப அரசு முயற்சிப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் கெளரி அசோகன், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிதாக தொடரப்பட்ட 3 வழக்குகள் நீதிபதி சுதா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி இந்த வழக்கை தாக்கல் செய்த சென்னை முதன்மை அமர்வு அரசு தரப்பு வழக்கறிஞர் கௌரி அசோகனிடம் சாட்சி விசாரணை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

அதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமரேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முதலில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் கௌரி அசோகனின் பிரமாண வாக்குமூலம் பதிவு செய்யப்படவேண்டும், பின்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் அதன் பின்னர் சம்மன் அனுப்பும் நடைமுறை, சாட்சி விசாரணை நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார். தற்போது இந்த நடைமுறையை மாற்ற முயற்சிப்பதாக கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 25-ஆம் தேதி நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.