Tamilnadu

“தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி”: பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் மீது குற்றப்பிரிவு வழக்குப் பதிவு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.கவை சேர்ந்த கல்யாணராமன், நபிகள் நாயகத்தை பற்றியும், அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியுள்ளார்.

இதனையடுத்து நபிகள் நாயகத்தை பற்றி அவதூறாகப் பேசிய கல்யாணராமனை கைது செய்திட வலியுறுத்தி பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து கடந்த 1ம் தேதி முகமது நபி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் உள்ளிட்ட 2 பேரை தேசிய ஒருமைபாட்டை சீர்குலைக்க முயற்சித்தல் உட்பட 8 பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குபதிவு செய்து அவினாசி சிறையில் அடைத்துள்ளனர்.

வெல்ஃபேர் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முகமது கவுஸ் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 1-ம்தேதி புகார் ஒன்றை கொடுத்தார். அதில், “முகமது நபிகள் குறித்து பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருகிறார்.

சமீபத்தில் கல்யாணராமன், முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சமூக அமைதியை கெடுக்கும் உள்நோக்கத்தோடு கல்யாணராமன் செயல்பட்டு வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் விசாரணை நடத்தினர். பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் மீது சைபர் கிரைம் போலிஸார் 153A (1) (a)-கலகம் செய்ய தூண்டி விடுதல், 295 A-மதங்களை மையப்படுத்தி குற்றத்தில் ஈடுபடுதல், 505(1), (b), (c) - பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், 505(2)- மிரட்டல், அவமதித்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: பிப்.,7ல் கோரிக்கை.. 9ம் தேதி உதவிக்கரம் நீட்டிய தி.மு.க.. ஏழைப் பெண்ணின் வறுமையை போக்கிய மு.க.ஸ்டாலின் !