Tamilnadu
“அ.தி.மு.கவினர் பலனடைவதற்காக பயிர்க் கடன் தள்ளுபடியா?” : விவசாயிகளை ஏமாற்றும் எடப்பாடி அரசு !
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் விடுத்துள்ள அறிவிப்பில், கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவை தொகையான ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும். இதற்கான நிதி ஆதாரத்தையும் வருகின்ற நிதிநிலை அறிக்கையிலேயே ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார். முன்னதாக, சமீபத்தில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்கடன் மற்றும் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்தே முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பலன்தராது. அ.தி.மு.க.வினரே அதிக பயனடைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 2006ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, தமிழகத்தில் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள், கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய நகைக்கடன், பயிர்க்கடன், டிராக்டர் கடன், கிணறு, கேணி வெட்ட வாங்கிய கடன் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் கடனையும் ரத்து செய்தது. இதன்மூலம் தமிழகத்தில் ரூ.7 ஆயிரம் கோடிக்கான கடனை தி.மு.க அரசு ரத்து செய்தது.
ஆனால், இப்போது முதல்வர் அறிவித்திருப்பது வெறும் பயிர்கடன் மட்டுமே. இதுவும், சிறு, குறு விவசாயிகளுக்கான கடனாக உள்ளது. மேலும், கூட்டுறவு வங்கியின் நிர்வாகத்தில் தலைவராகவும், இயக்குநர்களாகவும் அ.தி.மு.க.வினர் இருப்பதால், அவர்களின் உறவினர் பெயரில் பயிர்க்கடன் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளது. உண்மையான சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை.
இதனால் அவர்கள் பயிர் சாகு படிக்காக நகைகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்து அந்தப் பணத்தை செலவிட்டு விவசாயம் செய்துள்ளனர். அந்தக் கடன் தள்ளுபடி இல்லை. அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி அ.தி.மு.க. வினருக்கு மட்டுமே மகிழ்ச்சியை தரும். உண்மையான சிறு, குறு, பெரிய விவசாயிகளுக்கு பயன்தராது.
எனவே அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலும், கூட்டுறவு வங்கியிலும், விவசாயிகள் வாங்கிய அனைத்து வகையான கடனையும் ரத்து செய்ய வேண்டும். அந்த அறிவிப்பு தான் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய கடன் தள்ளுபடி அறிவிப்பு, விவசாயிகளை ஏமாற்றுவதாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே தி.மு.க பிரச்சாரங்களில் விடுக்கப்படும் அறிவிப்பையே, அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. ஏற்கனவே கிஷான் திட்டத்தில் போலி விவசாயிகள் பலர் ஊடுருவியதால் கோடிக் கணக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது. தற்போது பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பால் உண்மையான விவசாயிகள் பயனடைவார்களா? அல்லது அ.தி.மு.கவினர் பலனடைவதற்கான அறிவிப்பா என்பது போக போகத்தான் தெரியும்.
ஏற்கனவே குடிமராமத்து பணிகளில் அ.தி.மு.க.வினர் பலர், போலி விவசாய சங்கங்கள் மூலம் டெண்டர் எடுத்து பணிகளை எடுத்து செய்து வந்தனர். இதனால் கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படவில்லை. குடிமராமத்து பணிகள் மூலம் கோடிக்கணக்கில் அ.தி.மு.க.வினர் சுருட்டியதாக விவசாயிகள், பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரசானது ஒரு அறிவிப்பை வெளியிடும் போது, அதனால் யார், யார் பலனடைகின்றனர். திட்டம் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களை போய் சேர்கிறதா என்பதை ஆராய வேண்டும். விவசாயிகள் விரும்பாத வேளாண் சட்டங்களை புகுத்துவது போல, விவசாயிகள் பலனடையாத திட்டங்களை அறிவித்து பயன்தான் என்ன?
- நன்றி தினகரன்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!