Tamilnadu
"சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தேர்தல் அறிக்கையும், தி.மு.க தலைவரும் இரண்டு கதாநாயகர்கள்" : கனிமொழி எம்.பி
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தேர்தல் அறிக்கையும், தி.மு.க தலைவரும் இரண்டு கதாநாயகர்கள் என தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரச்சாரத்திற்காக இன்றும் நாளையும் மதுரையில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
“பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். மக்களிடையே ஒரு பெரிய மாற்றத்தைக்காண எழுச்சி உருவாகிறது என்பதை மிகத் தெளிவாக காணமுடிகிறது. 10 ஆண்டுகளாக இந்த ஆட்சி பொதுமக்களுக்கு எதையும் செய்யவில்லை, வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தரவில்லை. மக்கள் விரைவில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகள் வேண்டாத வேளாண் திட்டங்களையே வரவேற்கக்கூடிய ஆட்சி, எந்த நல்ல திட்டங்களை கொண்டு வரும் என்பது தெரியவில்லை. தி.மு.க தலைவர், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் செய்வோம் என்று ஜனவரி மாதத்திலேய உறுதி அளித்திருந்தார். சில வாரங்களுக்குப் பிறகுதான் கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி என்கிறார் முதல்வர் பழனிசாமி. எல்லாமே வெற்று அறிவிப்புகள் தான்.
செய்யாத விஷயங்களை செய்ததாகச் சொல்லி, பத்திரிகைகளில் போலியாக விளம்பரம் செய்து வருகின்றனர். மக்கள் அனைவருக்கும் எந்த வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை என்பது தெரிந்த ஒன்று. ஆனால் செய்யாததை எல்லாம் செய்வதாகக் கூறி கொண்டுள்ளார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னால் தி.மு.க செய்த சாதனைகளை சொல்லி வருகிறோம். தி.மு.க வாக்குறுதிகளை நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது.
மதுரை மக்களுக்காகவே பல விஷயங்களை அறிவித்த அ.தி.மு.க எதையாவது ஒன்றைச் செய்து முடித்திருக்கிறார்களா? அடிக்கல் நாட்டுகிறார்கள், செய்வோம் என்று அறிவிக்கிறார்கள் அறிவிப்புகளை செய்து முடித்த சரித்திரமே கிடையாது.
ஆட்சியில் இல்லை என்பதால் மனுக்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் செய்து முடிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். கலைஞரைப் போன்று தளபதி அவர்களும் முதல்வரானவுடன் நிச்சயம் நிறைவேற்றுவார்.
சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தி.மு.க தேர்தல் அறிக்கையும், தளபதி மு.க.ஸ்டாலினும் இரண்டு கதாநாயகர்கள். தி.மு.க ஆட்சி அமைந்ததும் தென்தமிழகத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
தி.மு.க ஆட்சிக்கு வரமுடியாது என்று முதல்வர் சொல்கிறாரே? என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, இந்தத் தேர்தலுக்குப் பிறகு யார் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெரியும் என பதிலளித்தார் கனிமொழி எம்.பி.,
சசிகலா தி.மு.க வின் பி டீம் என அ.தி.மு.கவினர் கூறுகிறார்களே” எனக் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, “அவர்கள் இதே சசிகலாவை சின்னம்மா இல்லை எங்கள் அம்மா என்றார்கள். தற்போது உடல்நலம் குறைந்த அவரை என்னவெல்லாமோ சொல்கிறார்கள். இவர்கள்தான் பா.ஜ.கவின் பி டீமாக அல்ல பா.ஜ.கவின் பீடமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.” என பதிலளித்தார்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!