Tamilnadu
“69% இடஒதுக்கீட்டின் படி M.Tech படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மீண்டும் தொடரும்” : அண்ணா பல்கலை. உறுதி!
அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
இதை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், உயிரி தொழில்நுட்பவியல் துறை இந்தியாவிலேயே முதன்முதலில் 1986ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டது. தற்போது 45 மாணவர்கள் வரை படித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 50 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-2021-ஆம் ஆண்டில் இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாகவும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, இத்தனை ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை திடீரென ரத்து செய்தது ஏன்? இது நியாயம் இல்லை எனவே தமிழக அரசுடன் ஆலோசித்து படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது .அப்போது மத்திய அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி பட்டபடிப்பிற்காக நிதி வழங்குகறீர்களா? எந்த பிரிவு மாணவர்கள் வர வேண்டும் என்பதற்காக நிதி உதவி செய்கிறார்களா? என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், படிப்பிற்கு தான் தங்கள் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிறுத்தப்பட்ட இரு படிப்புகளை தொடர்ந்து நடத்துவதாக உறுதி அளித்தார். மத்திய அரசு இட ஒதுக்கீடு மற்றும் மாநில அரசினுடைய இட ஒதுக்கீட்டின் கீழ் படிப்பை தொடர்ந்து நடத்த மேலும் 9 இடங்களுக்கான அனுமதி தேவை என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வழக்கறிஞர் 9 இடங்களுக்கு அனுமதி தருவதாக தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உடைய பதிலை எழுத்துப்பூர்வமாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!