Tamilnadu
“நீர்நிலை சீரமைப்பு பணிகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
திருவொற்றியூரில் உள்ள தேவிகுளம் ஏரியை சீரமைக்க ரயில்வே நிர்வாகத்துக்கு நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருவொற்றியூரில் எண்ணூர் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள தேவிகுளம் ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தென்னக ரயில்வே சார்பில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “தேவிகுளம் ஏரி 187 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இது எண்ணூர் நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் 750 மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. இதன் கரையில் பொதுமக்கள் குப்பையை கொட்டி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் சார்பில் குளத்தில் கொட்டப்பட்ட குப்பை அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அப்பகுதியில் குப்பை கொட்டாமல் நிரந்தரமாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாயை நெடுஞ்சாலைத் துறை கட்டியுள்ளது. அதில் அடைந்துள்ள குப்பையை அகற்ற நெடுஞ்சாலைத் துறையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏரிக் கரையில் சுவர் எழுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை மற்றும் சென்னை மாநகராட்சியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், ஏரியை சீரமைக்க போதிய அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ரயில்வே நிர்வாகத்தின் நீர்நிலை சீரமைப்பு பணிக்கு நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அது தொடர்பான அறிக்கையை, வழக்கு மீதான அடுத்த விசாரணை நாளான மார்ச் 25-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!