Tamilnadu
உற்பத்தி செய்த நெல்லை விற்க பணம் செலுத்த கெடுபிடி - போலி விவசாயிக்கு திமுக விவசாய அணிச் செயலாளர் கண்டனம்!
நெல்லை உற்பத்தி செய்யும் விவசாயி அதனை விற்பனை செய்து பணமாக்க அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு செல்லும் நிலை மாறிப்போய், இன்றைக்கு நெல்லை விற்பதற்கே பணம் கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 800 சிப்பங்கள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுவதை அதிகரித்து, 1500 சிப்பங்கள் வரை கொள்முதல் செய்யப்பட வேண்டும் எனவும் மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது அறிக்கையில் மாநில விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் கூறி இருப்பதாவது:
“தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக விவசாயிகளால் கடன், நிவர் மற்றும் புரவி புயல் உள்ளிட்ட பல இன்னல்களைத் தாண்டி சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் முற்றிலும் சேதமடைந்து விவசாயத்தை பாழ்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூபாய் 30,000 நிவாரணமாக தந்து விவசாயிகளின் சோகத்தில் அரசு பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என கழக தலைவர் தளபதி அவர்கள் வைத்த கோரிக்கையினையும் இந்த அ.தி.மு.க. அரசு நிராகரித்து விவசாயத்தையும் விவசாயிகளையும் பழி வாங்கி வருகிறது.
மேலும் தமிழகத்தின் பல கிராமப் பகுதிகள் குறிப்பாக டெல்டா பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டிருந்தும் அ.தி.மு.க. அரசின் அலட்சிய கணக்கெடுப்பால் விடுபட்டிருந்த நிலையில் கழக தலைவர் தளபதி அவர்களின் வழிகாட்டுதல்களோடு பல்வேறு இடங்களில் போராட்டங்களை மாநில விவசாய அணியின் சார்பில் நடத்தி கணக்கெடுப்பை முறையாக எடுக்க வலியுறுத்தி இருக்கிறோம்.
தற்போது மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் போக எஞ்சி தப்பி பிழைத்த பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சாகுபடிக்கே பல இன்னல்களுக்கு ஆளான விவசாயி பெருமளவு பாதிப்படைந்த நெல்லின் ஒரு பகுதியையாவது அறுவடை செய்து அதனை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனை செய்ய கொண்டுவந்து இருக்கிறார்கள். இதில் அறுவடை இயந்திரம் கிடைக்காமல் உரிய நேரத்தில் அறுவடை செய்ய முடியாமல் அந்த நெல்லும் மேலும் பாதிப்படைகிறது.
இந்த நிலையில் அரசு கொள்முதல் நிலையங்களில் குறிப்பிட்ட அளவு நெல்லை மட்டுமே கொள்முதல் செய்வோம் எனவும், நெல்லின் ஈரப்பதம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு வண்ணம் மாறிய நெல் ஆகியவற்றை காரணம் காட்டி, விவசாயிகளை பரிதவிப்பில் இந்த அரசு தள்ளிவருகிறது. இது மிகவும் கண்டிக்கத் தக்கது. அறுவடை செய்து நெல்லை கொள்முதல் நிலையம் வரை கொண்டுவர பணத்தை செலவு செய்யும் விவசாயி அந்த நெல்லை விற்பனை செய்து பணம் கிடைத்த பின்னரே சாகுபடிக்கு செய்த செலவுகளை ஈடுசெய்ய முடியும்.
ஆனால் அ.தி.மு.க. அரசின் விவசாய விரோத போக்குகளால் நெல்லை விற்பனை செய்யவும் விவசாயி பணம் கொடுக்க வேண்டிய நிலையும், அந்த நெல்லை கொள்முதல் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தில் கொள்முதல் செய்யப்படும் வரை பாதுகாக்கவும், உலர்த்தவும், நெல் கொள்முதல் நிலையங்களில் கேட்கப்படும் கையூட்டுக்கு கொடுக்கவும் மேலும் மேலும் செலவுசெய்ய பணத்தை தயாராக கொண்டு செல்லவேண்டிய இக்கட்டான சூழ்நிலையை இந்த அரசு கொடுக்கிறது.
ஏற்கனவே அரசின் விவசாய விரோத செயல்பாடுகளினாலும், இயற்கை பேரிடர்களினாலும் பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றிட, இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் 1500 சிப்பங்கள் வரை கொள்முதல் செய்து கொள்ளவும், ஈரப்பதம் மற்றும் வண்ண மாற்றம் போன்றவைகளை காரணம் காட்டி நெல்லை திருப்பி அனுப்பாமலும், கொண்டு வரப்படும் நெல்லை காத்திருக்க வைக்காமலும் கொள்முதல் செய்துகொள்ள ஆவன செய்ய போர்க்கால அடிப்படியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தமிழகத்தின் அனைத்து வருவாய் கிராமங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அதிக தூரம் பயணித்து கொண்டு செல்லும் நிலையை தவிர்ப்பதோடு, அனைத்து நெல்லையும் தாமதம் இன்றி கொள்முதல் செய்து கொள்ளவேண்டும்.”
இவ்வாறு மாநில விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!