Tamilnadu

மேலும் 8 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர்மாற்றம்?: பாஷ்யம் நிறுவனத்தில் அ.தி.மு.க அமைச்சர்களுக்கு பங்கு!

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் தலைமை அலுவலகம் கோயம்பேட்டில் அமைந்துள்ளது. அங்குள்ள பாலத்திற்கு, கடந்த சில நாட்களாக பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில், திடீரென இரவோடு இரவாக ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ எனப் பெயர் எழுதினர். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க அமைச்சர்கள் பலர் பாஷ்யம் நிறுவனத்தில் மறைமுகமாக முதலீடு செய்துள்ளதாகவும், இதன் காரணமாகவே அந்நிறுவனம், சென்னையில் மேற்கொள்ளும் கட்டிடப் பணிகளுக்கு சி.எம்.டி.ஏ எவ்வித தடங்கலும் இன்றி அனுமதி வழங்கி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய மேம்பாலத்தில் இந்த பெயர் திடீரென வைக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட வைகோ, “யார் அந்த பாஷ்யம்? கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை விலைக்கு வாங்கி இருக்கின்றாரா? அது நிறுவனமா? அல்லது தனி ஒருவரா? அல்லது பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தம் பெற்று இருக்கின்றாரா? அவர் தமிழ்நாட்டுக்குச் செய்த தியாகம் என்ன? எதற்காக இந்தப் பெயர் மாற்றம்? என்பதற்கு, சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்தப் பெயர் மாற்றம் குறித்து தமிழக அரசுக்குத் தெரியுமா? இதற்கு இசைவு அளித்து இருக்கின்றார்களா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். உங்கள் வீட்டுக்கு வண்ணம் பூச வருகின்ற ஒருவர், வீட்டு முகப்பில், தன் பெயரை எழுதினால், ஒப்புக் கொள்வீர்களா? கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டு இருக்கின்ற பாஷ்யம் என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

ஆனால், இதுகுறித்து தமிழக அரசு தரப்பிலோ, மெட்ரோ நிர்வாகம் தரப்பிலோ விளக்கம் அளிக்கப்படவில்லை. இதற்கிடையே, இதேபோன்று மேலும் 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் தனியார் நிறுவனங்களின் பெயர்களை வைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “தீர்மானம் போடுவார்கள்.. ஒன்றும் நடக்காது; இந்த அரைகுறை ஆட்சிக்கு முடிவுகட்டுவோம்”- மு.க.ஸ்டாலின் சூளுரை!