Tamilnadu

விவசாய கடன்களை ரத்து செய்யாமல் நீதிமன்றம் சென்ற எடப்பாடி அரசையே அறிவிப்பு வெளியிடச் செய்த தி.மு.க தலைவர்!

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என மாவட்டந்தோறும் முழங்கி வரும் தி.மு.க தலைவரின் பேச்சால் அச்சமுற்று, விவசாயக் கடனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, நான் ஆட்சிக்கு வந்தால் 7,000 கோடி ரூபாய் கூட்டுறவு வங்கிக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வேன் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்தார். அதேபோல, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பதவியேற்றதும், பதவியேற்பு விழா மேடையிலேயே 7,000 கோடி ரூபாய்க் கடன் ரத்துக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயக் கடன்களை ரத்து செய்யுங்கள் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்வது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை 2017ம் ஆண்டு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

உயர்நீதிமன்றமும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. அதனை நிறைவேற்ற முடியாத எடப்பாடி அரசு, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றத்தில் போய் தடை கேட்டது.

இவ்வாறாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் குலைக்கும் திட்டங்களைச் செயல்படுத்தி, விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் எடப்பாடி அரசுதான் தி.மு.க தலைவரின் வாக்குறுதியால் அஞ்சி, தற்போது விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

தி.மு.க சார்பில் நடைபெற்று வரும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் எல்லாம், “விவசாயிகளின் வாழ்வு செழித்திடும் வகையில், தலைவர் கலைஞர் வழிநின்று, விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கான உத்தரவைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு போடும்” என்று உறுதிபடத் தெரிவித்து வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

தி.மு.க தலைவரின் இந்த அறிவிப்புக்கு விவசாயப் பெருங்குடி மக்களிடையே எழுந்துள்ள பேராதரவால் அச்சமடைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக இந்தக் கூட்டத்தொடரில் கடன் ரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே அ.தி.மு.க அரசை செயல்பட வைக்கிறார் என பொதுமக்கள் பேசிவரும் நிலையில், தி.மு.க தலைவர் கூறிய வாக்குறுதியையே சட்டப்பேரவையில் அறிவித்து, அந்தக் கூற்றை உறுதிப்படுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.