Tamilnadu

காட்டுப்பள்ளி துறைமுகம்: கருத்துக்கேட்பு கூட்டம் கூட மக்களுக்கு சாதகமான பகுதியில் நடத்தக்கூடாதா?

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாரம்பரிய மீன்பிடிப்போர் சங்கத்தின் தலைவர் எத்திராஜ் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின்படி தனியார் நிறுவனத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் தொடர்பான அறிவிக்கையை வெளியிடப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விரிவாக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய அருகில் வசிப்பவர்களிடம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், ஆனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை பொதுமக்கள் எளிதில் சென்று வர முடியாத 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீஞ்சூரில் நடத்துவதாக அறிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Also Read: அதானியின் லாபவெறிக்கு பலியாகப்போகும் சென்னை; காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு

இந்த விரிவாக்கத்தால், துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தங்கள் அரங்கன்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், மேலும் இதனால் ஏற்படக்கூடிய கடல் அரிப்பால், கடலோர கிராமங்கள் காணாமல் போகும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அருகிலேயே நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு, தமிழக அரசு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தது.

Also Read: “35 லட்சம் மக்களுக்கு வெள்ள அபாயம் : காட்டுப்பள்ளி அதானி திட்டத்தை கைவிடுக” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!