Tamilnadu
“பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தி.மு.க தலைவர் முதல்வரானால் மட்டுமே சாத்தியம்”: ஆர்.எஸ்.பாரதி பேச்சு!
திருச்சி, கரூர் மாவட்டங்களில் தி.மு.க வழக்கறிஞர்கள் களப்பணி அலுவலகத்தை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., இன்று திறந்துவைத்தார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆர்.எஸ்.பாரதி எம்.பி., “தி.மு.க வழக்கறிஞர் அணியின் செயல்பாடுகளை கவனித்த தி.மு.க தலைவர் கழகப் பணியுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக மாவட்டந்தோறும் தலைமை அலுவலகத்தில் ஒரு அலுவலகம் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்புகளை வெளியிடுவதால், பல தேர்தல்களைச் சந்தித்தவர்களுக்கும் சட்டப்பூர்வமான அறிவுரைகள் தேவைப்படுகிறது. எனவே வழக்கறிஞர்களை வைத்து பல முன் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்திய நாட்டில் நடைபெறும் தேர்தல் பணிகளில் தி.மு.க வழக்கறிஞர்கள் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றனர். உதாரணமாக 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்கும் முறை பற்றி தி.மு.க எடுத்துரைத்த பிறகு தான் மற்ற மாநிலங்களில் இதுகுறித்து தெரிய வருகிறது.
தி.மு.க ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோதும் முரண்பட்ட கொள்கை கொண்ட கட்சியினர் மத்தியில் ஆட்சியில் இருந்துள்ளனர். இருந்தபோதும் நாங்கள் சிறந்த ஆட்சியை தந்துள்ளோம். வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தாலும் சிறந்த முறையில் ஆட்சி செய்வோம். மத்தியில் இருப்பவர்களோடு கூட்டாட்சி செய்ய அறிவு கூர்மை இருந்தால் போதும்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை சாத்தியமாகும். தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவரை விடுதலை செய்யும் தைரியம் இல்லை.
பிப்ரவரி 28 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்க உள்ளார்கள். அது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் சுமார் 20 நாட்களே உள்ளதால் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து அ.தி.மு.க வால் எதுவும் செய்ய இயலாது.
தி.மு.க கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முடிவெடுப்பார். கமல் தி.மு.க கூட்டணியில் இணைவாரா என்பது குறித்துச் சொல்ல, எங்களுக்கு ஜோதிடம் தெரியாது.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!