Tamilnadu
NLC எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 99% வெளி மாநிலத்தவர்கள்? - தி.மு.க எம்.எல்.ஏ கண்டனம்!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் Graduate Executive Trainee காலி பணியிடத்திற்கு எழுத்து தேர்வு நடைபெற்ற நிலையில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,582 நபர்களில் 99% வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என என்.எல்.சி.நிர்வாகம் அறிவித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக இளைஞர்களை அடியோடு புறக்கணித்த என்.எல்.சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிப்பதோடு, நியாயமான முறையில் தேர்வு நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பாக கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி GET Graduate Executive Trainee என்கின்ற பணியிடத்திற்கு 259 காலியிடங்களை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டது. இதற்கான முதற்கட்ட எழுத்து தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் 2020ல் நடைபெற்றது. ஜனவரி 30ம் தேதி அடுத்த கட்ட நேர்முகத் தேர்விற்கு தேர்ந்தெடுத்தோர் பட்டியலில் 1,582 நபர்கள் இடம் பெற்றனர், இதில் 10 நபர்கள் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இடம் பெறவில்லை.
1 இலட்சத்து 52 ஆயிரம் நபர்கள் தேர்வு எழுதிய நிலையில், வெளி மாநில தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய நபர்களில் 99% தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் நாட்டில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 1% நபர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் நடைபெற்ற தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்கின்ற சந்தேகம் எழுகிறது. அதே போல் வீடு, நிலம் கொடுத்வர்களுக்கோ, அப்ரண்டிஸ் முடித்து நிரந்தர பணிக்காக காத்திருப்பவர்களுக்கோ, இந்த நிறுவனத்திற்காக கடந்த 50 ஆண்டுகளாக உழைத்தவர்களின் வாரிசுகளுக்கோ இதுவரை எந்த வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை.
ஆகவே என்.எல்.சி. நிர்வாகத்தை வன்மையாக கண்டிப்பதோடு, இந்த எழுத்து தேர்வு முடிவை ரத்து செய்து, தமிழகத்திலேயே தேர்வு மையங்களை வைத்து, தேர்வை நியாயமாகவும், முறையாகவும் நடத்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமையும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடும் அளிக்க வேண்டும். இதற்கு என்.எல்.சி.நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், வீடு, நிலம் கொடுத்தவர்கள் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் கடலூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி தி.மு.க சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்பதை என்.எல்.சி. நிர்வாகத்தை எச்சரிக்கின்றோம்.
என்.எல்.சி. நிர்வாகத்தின் இந்த போக்கால் தமிழகம் மற்றும் கடலூர் மாவட்ட இளைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த பணி நியமன தேர்வை ரத்து செய்து நியாயமான முறையில் நடத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!