Tamilnadu

“பாலியல் வன்கொடுமை செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை” : சிறுமி வன்கொடுமை வழக்கில் மீண்டும் சர்ச்சை தீர்ப்பு!

ஆடைக்கு மேலே ஒரு குழந்தையின் உடலை தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பிற்கு எதிராக மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கில் நீதிமன்றங்கள் அளித்துவரும் தீர்ப்பு பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த வாரம் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் அமர்வு, 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரின் வழக்கில் அதிர்ச்சிகரமாக தீர்ப்பை வழங்கியது.

அதில், ‘பாலியல் ரீதியாக துன்புறுத்த நினைக்கும் ஒருவர், எதிர்பாலினத்தவரை ஆடை இல்லாத நிலையில், தோலுடன் தோல் தொட்டு தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என்று கருதப்படும். அதேநேரத்தில், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை அவர் அணிந்த ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறையாகாது. அது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வராது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, வேலூர் ஆயுதப்படை காவலர் சிவக்குமார் என்பவர், 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக உறுதியளித்து பலமுறை வெளியில் அழைத்துச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகவும், பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்ததாகவும் 2005ம் ஆண்டு இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

இதை விசாரித்த வேலூர் ஆயுதப்படை டி.எஸ்.பி., பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை என்றும், ஏமாற்றியது மட்டும் நிருபணமாவதாக அறிக்கை அளித்தார். இந்த அறிக்கையை ஏற்க மறுத்த வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர், காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, அவருக்கு கட்டாய ஓய்வு அளித்து 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உறுதி செய்ததை எதிர்த்து, சிவக்குமார் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, பாலியல் வன்கொடுமை செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறி, கட்டாய பணி ஓய்வு அளித்து எஸ்.பி. பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

மேலும் இந்த வழக்கை ஒழுங்கு நடவடிக்கைக் குழு மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும், இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்து குறைந்த தண்டனை விதிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட நாளிலிருந்து 50 சதவீத ஊதியத்தை பெற மனுதாரருக்கு உரிமையுள்ளதாகவும் நீதிபதிகள், தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Also Read: மக்கள் நல திட்டங்கள் அனைத்தையும் கிடப்பில் போட்ட அரசு - அ.தி.மு.கவினரால் மதுரைக்கு ஏற்பட்ட அவலம்!