Tamilnadu

“திமுக சாதனைகளை மறைத்து டாக்டர் ராமதாஸ் தனது சுயநலத்திற்காக பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்”: மு.க.ஸ்டாலின்

அம்மையார் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பதை பினாமிகள் மூலம் வழக்குப் போட்டுத் தடுத்தவர் ஸ்டாலின் என்று பொய் சொல்லியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்குத்தான், பினாமிகளை வைத்து ஊழல் செய்வது கைவந்த கலை. தி.மு.க. என்றைக்குமே நேரில் எதிர்க்கும் இயக்கம்"

"அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறியாமல் அவரது நினைவிடத்தைத் திறந்து வைக்க முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? - என்ற என்னுடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஏதேதோ உளறுகிறார்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (28-01-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கடலூர் மேற்கு மாவட்டம், நெய்வேலி தொ.மு.ச. அலுவலக வளாகத்தில், மாவட்டக் கழகச் செயலாளர் சி.வெ.கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்று தி.மு.கழகத்தில் இணைந்தவர்களை வாழ்த்தி வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியத்திலிருந்து மணிவர்மா அவர்களது தலைமையில் பா.ம.க.விலிருந்து 500 பேர், தே.மு.தி.க.விலிருந்து ஒன்றியப் பொறுப்பாளரும் அரசடிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருமான வீரபாண்டியன் தலைமையில் 60 பேர், தே.மு.தி.க.விலிருந்து முன்னாள் ஒன்றியச் செயலாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான அனந்தராமன் தலைமையில் 200 பேர், பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையம் பா.ம.க.விலிருந்து ஒன்றிய துணைச் செயலாளர் எ.சின்னத்தம்பி தலைமையில் 90 பேர், நாம் தமிழர் கட்சியிலிருந்து வடக்குத்து ஊராட்சி செயலாளர் பிரபாகரன் தலைமையில் 120 பேர், நெய்வேலி நகர எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் சொரத்தூர் சேகர் தலைமையில் 60 பேர், பண்ருட்டி ஒன்றியம் ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து ஒன்றிய அமைப்பாளர் கே.வெங்கடேசன் தலைமையில் 80 பேர் என, 1,110 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தி.மு.கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மாற்றுக் கட்சியினரை தி.மு.கழகத்திற்கு வரவேற்று கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியத்தில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

இந்த இயக்கம்தான் சமூகநீதியைக் காப்பாற்றும். இந்த இயக்கம்தான் ஏழை, எளிய - பாட்டாளி மக்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும். இந்த இயக்கம்தான் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும். இந்த இயக்கம்தான் கொரோனா பேரிடர் என்றாலும், நிவர் புயல் என்றாலும் முதலில் ஓடோடி வந்து உதவி செய்யும் - ஆறுதல் சொல்லும்!

அந்த நம்பிக்கையில்தான் நீங்கள் எல்லாம் இந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை வீண் போகாது என்ற உறுதியை நான் அளிக்க விரும்புகிறேன். வன்னியர் சமுதாயம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 20 சதவீத இடஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு கேட்டுப் போராடி - உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், உதவித் தொகையைும் அளித்தது தி.மு.க. ஆட்சி.

தமிழ்நாட்டில் முதன்முதலில் டி.ஜி.பி.யாக ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த கட்சி தி.மு.க. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த ஆட்சி தி.மு.க. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த ஆட்சி தி.மு.க. ஆனால், டாக்டர் ராமதாஸ் அவர்கள் சொந்த ஆதாயத்திற்காக - சுய நலத்திற்காக, தி.மு.க., வன்னியர் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகளை மறைத்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துதான் இன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீங்கள் எல்லாம் விலகி - இந்த மாபெரும் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறீர்கள். ஆகவே, டாக்டர் ராமதாஸ் தி.மு.க.வைப் பற்றி விமர்சிக்க விமர்சிக்க, அக்கட்சியில் உள்ள பாட்டாளிகள் தி.மு.க.வை நோக்கி இன்னும் அதிகமாக வரப் போகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை.

தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கவில்லை. இங்கே ஊழல் காட்சி நடைபெற்று வருகிறது. படித்து விட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள். சிறு, குறு தொழில்கள் எல்லாம் நலிவடைந்து விட்டன.

கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்ற அமைச்சர் எம்.சி. சம்பத்துதான் தொழில்துறை அமைச்சராக இருக்கிறார். ஆனால், 1000 பேருக்கு வேலை வழங்கும் ஒரு தொழிற்சாலையை இங்கு கொண்டு வந்தாரா? வேலைவாய்ப்பின்றி உள்ள 100 இளைஞர்களுக்காவது வேலை கொடுத்தாரா? நிவர் புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு - குறிப்பாக, வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுத்தாரா?

எதுவும் செய்யவில்லை. மக்களை ஏமாற்றியதுதான் அமைச்சர் எம்.சி. சம்பத் ஆற்றிய ஒரே பணி.அவர் மட்டுமல்ல, அ.தி.மு.க. அமைச்சர்கள்- முதலமைச்சர் அனைவருமே மக்களை இந்தப் பத்தாண்டில் ஏமாற்றி விட்டார்கள். தினம் ஒரு தகவல் போல் – தினம் ஒரு பொய் சொல்வது முதலமைச்சர் பழனிசாமிக்கு வாடிக்கையாகி விட்டது. காரணம், அவரிடம் சாதனைகளைச் சொல்ல சரக்கு இல்லை. ஆகவே பொய் சொல்லி மக்களைக் குழப்பலாம், ஏமாற்றலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்.

நேற்றுக்கூட ஜெயலலிதா நினைவிடம் திறப்பதை, பினாமிகள் மூலம் வழக்குப் போட்டுத் தடுத்தவர் ஸ்டாலின் என்று ஒரு பொய்யைக் கூறியிருக்கிறார். பினாமிகளை வைத்து ஊழல் செய்வது, பழனிசாமிக்குக் கைவந்த கலை. பினாமிகள் பெயரில் டெண்டர் விடுவது பழனிசாமிக்குப் பழக்க தோஷம். ஆனால் தி.மு.க. என்றைக்குமே நேரில் எதிர்க்கும் இயக்கம்.

தவறு என்றால் அதை நெஞ்சுரத்துடன் தட்டிக் கேட்கும் இயக்கம் இது. அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிப்போம் என்று விசாரணை ஆணையம் அமைத்த முதலமைச்சர் பழனிசாமியும், அது பற்றிக் கண்டு கொள்ளவில்லை; தர்மயுத்தம் நடத்தி ஆணையம் கேட்ட ஓ.பன்னீர்செல்வமோ - விசாரணைக்கே போகவில்லை.

பொன்பரப்பி சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 

அதனால்தான், "ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க முடியாத உங்கள் இருவருக்கும் நினைவு மண்டபத்தை திறந்து வைக்க என்ன யோக்கியதை இருக்கிறது" என்று நான் நேரடியாகவே கேட்டேன். இன்றுவரை அதற்கு பதில் சொல்லத் துப்பு இல்லாத, வக்கு இல்லாத பழனிசாமி ஏதேதோ உளறுகிறார். தேர்தல் நாள் நெருங்க நெருங்க இன்னும் பல உளறல்களை பழனிசாமியிடமிருந்து நீங்கள் கேட்கலாம்.

ஏனென்றால் பழனிசாமியின் ஊழல்களுக்கு விசாரணைக் கமிஷன் போட வேண்டிய தேவையில்லை. அவர் கையெழுத்துப் போட்ட கோப்புகளில் அணிவகுத்து நிற்கிறது. செய்த ஊழல்களுக்கு எத்தனை ஆண்டுகள் சிறைக்குப் போக வேண்டும் என்பதை நினைத்து பழனிசாமிக்கு உறக்கம் வரவில்லை. உளறல்கள்தான் அதிகரிக்கிறது. கொரேனா காலத்தில் “ஒன்றிணைவோம் வா” என்ற மாபெரும் மக்கள் இயக்கம் மூலம் உங்களை எல்லாம் சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம். பிறகு “மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்” மூலம், ஊராட்சி அளவில் மக்களைச் சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம்.

இப்போது, நாளை முதல் திருவண்ணாமலையில் இருந்து, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன் என்பதை விட, நேரில் உங்களிடம் எல்லாம் ஒரு வாக்குறுதியைக் கொடுக்க வருகிறேன். உங்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களுக்குள், உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதுதான் அந்த வாக்குறுதி. இது ஸ்டாலினின் வாக்குறுதி!

இந்த ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தால், அதை நிறைவேற்றிக் காட்டுவேன். அதுதான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எனக்கு கற்றுத் தந்த பாடம். தி.மு.க. என்றைக்கும் உங்களுக்கான கட்சி; தமிழக மக்களுக்கான கட்சி; தமிழ்நாட்டின் நலனுக்கான கட்சி; ஆகவே என்றைக்கும் அதே மன உறுதியுடன், இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஏழை எளியவர்கள்- பாட்டாளி மக்கள் அனைவருக்கும் பாடுபடும் என்ற உறுதியை உங்களுக்கெல்லாம் தெரிவித்து, இந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கின்ற நீங்கள் அனைவரும், அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்கு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை ஏற்படுத்துவதற்கு சபதம் ஏற்க வேண்டும். அந்தச் சபதத்துடன் கிராமம் கிராமமாக - வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

Also Read: “மாமுல் தரலைன்னா வெட்டுவோம்” : கோயம்பேடு மார்க்கெட்டில் கஞ்சா போதையில் ரவுடிகள் வெறிச்செயல் !