Tamilnadu

“உங்களுடைய சிப்பாயாக டெல்லியில் எனது குரல் ஒலிக்கும்” : பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உறுதி !

தமிழகத்தில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரண்டாவது நாளான இன்று திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மத்திய மோடி அரசு பணமதிப்பிழப்பு செய்து மக்களின் முதுகெலும்பு உடைத்து, விவசாயத் தொழில் அழிக்கப்பட்டு, ஜி.எஸ்.டி அமல் செய்து சிறு குறு தொழில்களை முடக்கியது, போன்ற தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணத்தினால் மோடி பலவீனமானவர் என்பதை புரிந்துகொண்டு, சீனர்கள் எளிதாக இந்தியாவிற்குள் நுழைந்து விட்டனர் என்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, சேர, சோழ மன்னர்களை நிறைவாக பெற்ற மண் இது. திருப்பூர் இந்திய ஏற்றுமதியின் தலைநகராக இருக்கின்றது. ஏற்றுமதி தொழிலுடன் வேளாண் தொழிலையும் வெற்றிகரமாக செய்து வருகின்றீர்கள். இன்று நெசவாளர்கள் சந்தித்தேன். நாளை வேளாண் விவசாயிகளை சந்திக்க இருக்கின்றேன். வேளாண் குடிகள், மீனவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் ஆகியோர்தான் நாட்டின் அடிப்படை என்றார்.

அடிப்படை கட்டுமானம் சரியாக வேண்டும் என்பது நிர்வாகத்தை நடத்துபவர்களுக்கு தெரியவேண்டும். இந்த சிறிய உண்மை கூட தெரியாதவர்கள்தான் ஆட்சியில் இருக்கின்றனர். சிறு குழந்தைக்கு கூட அடிப்படை கட்டுமானம் அவசியம் என்பது தெரியும். ஆனால், இன்றைய பிரதமர், அடிப்படை கட்டுமானத்தை இடித்து, அதன் மீது இருக்கும் சுவரை இடித்து விட்டு கூரை போட முயல்கின்றார்.

அவரது அறியாமையை பற்றி அவரிடம் சொல்ல அவரை சுற்றி இருப்பவர்கள் பயப்படுகின்றனர். நாட்டின் அடித்தளம் வேற்றுமையில் ஒற்றுமை. அனைத்து கலாச்சாரங்கள் மீது மரியாதை, வரலாறுகளை பற்றிய மரியாதை வேண்டும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் , பி.ஜே.பி போன்றவை ஓரே நாடு, ஓரு மொழி, ஓரே கலாச்சாரம் என்கின்றனர்.

தமிழ், வங்காளம், பஞ்சாபி போன்ற மொழிகளுக்கு வரலாறு இல்லையா இதனை புறக்கணிப்பது, நாட்டின் அடித்தளத்தின் மீது நடத்தப்படும் முதல் தாக்குதல் என்றார். தனிமனித மரியாதை, அனைத்து கலாச்சாரங்களையும் மதித்தல் போன்றவை அவசியம் என அப்படி ஒரு நிலை இருக்க, பிரதமர் மோடி ஒரு போதும் தமிழ் மொழி, கலாச்சாரத்தை அவமானப்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன்.

தொழில் முதுகெலும்பை உடைக்க ஜி.எஸ்.டி சட்டத்தை கொண்டு வந்திருக்கின்றனர். தமிழகத்தில் இருக்கும் லட்சகணக்கான இளைஞர்களின் கனவுகளை பா.ஜ.க அரசு சிதைத்துள்ளது.

கொரோனா வந்தவுடன் மோடி அவரது 5 பணக்கார நண்பர்களின் 10 லட்சம் கோடியை ரத்து செய்தார். ஆனால் மக்களுக்கான கடன்கள் ரத்து செய்யப்பட வில்லை. மேக் இன் இந்தியா உண்மை எனில் ஜி.எஸ்.டி வரியை ஏன் கொண்டு வந்திருக்க வேண்டும். 56 மார்பு உடைய இந்த பிரதமர், இப்போது அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்கின்றார்.

சீன ராணுவம் நமது இடத்தை ஆக்கிரமிப்பு செய்த கொண்டு இருக்கின்றது. சீன நாட்டினர் பிரதமர் மோடி பலவீனமானவர் என்பதை புரிந்து கொண்டனர். இதனால் தைரியமாக நமது நாட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர். 3 விவசாயசட்டங்கள் மூலம் சந்தை பொருளாதாரத்தை சிதைக்க முயல்கின்றார். உணவு தானியங்களை அளவின்றி சேமித்து வைக்க அவரது பணக்கார நண்பர்களுக்கு மோடி உதவுகின்றார்.

விவசாயிகள் விவசாய சட்டங்களை எதிர்த்து நீதிமன்றம் செல்லமுடியாது. தங்கள் எதிர்காலத்தை சிதைப்பதை விவசாயிகள் உணர்ந்து இருக்கின்றனர். விவசாயிகளும், காங்கிரஸ் கட்சியும் இதை அனுமதிக்காது.

தமிழ்நாட்டு அரசை பிளாக் மெயில் செய்வது போல , தமிழக மக்களையும் மிரட்டி விடலாம் என மோடி நினைகின்றார். தமிழகத்தின் எதிர்காலத்தை தமிழக இளைஞர்கள்தான் முடிவு செய்வார்கள். நாக்பூர் சாராய வியாபாரிகள் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது. தமிழக இளைஞர்களால் மட்டுமே நிர்ணயம் செய்ய முடியும். மக்கள் நலன் சார்ந்த அரசை உருவாக்கவே நான் உதவுகின்றேன். மக்கள் நலன் சார்ந்த அரசை அவர்களால் மிரட்ட முடியாது.

Also Read: “நமது விவசாயிகளின் தீவிர போராட்டம் மோடியை வெளியே வரவிடாது செய்துள்ளது” - திருப்பூரில் ராகுல்காந்தி பேச்சு