Tamilnadu

“அதிமுக அரசின் டெண்டர் அலிபாபா குகை போல; எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே திறக்கும்”- கனிமொழி விளாசல்!

'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பிரசாரத் திட்டத்தின் ஒருபகுதியாக சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கடந்த 2 நாட்களாக மக்களைச் சந்தித்து வருகிறார் தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.,

இன்று திருப்பத்தூரில் மக்கள் மத்தியில் னிமொழி எம்.பி., பேசுகையில், “மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க அரசு பெண்களை பாதுகாக்க தவறிவிட்டது. இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு என்பது வெறும் கனவாகவே இருந்து வருகிறது.

100 நாள் வேலைத் திட்டத்தில் 400 கோடி ரூபாய் அளவிற்கு மெகா ஊழல் அரங்கேறி உள்ளது. தி.மு.க கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.

ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த எடப்பாடி பழனிசாமி, அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இன்றளவும் எடுக்கவில்லை. இன்னும் 3 மாதங்கள் தான்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளின் நலன் பேணுதல், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்குதல், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாள் ஆக மாற்றுதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்தல் என மக்களின் அனைத்து தேவைகளையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” எனத் தெரிவித்தார்.

சிவகங்கையில் பேசிய கனிமொழி எம்.பி., “தி.மு.க 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். அ.தி.மு.க ஆட்சி மக்களுக்குப் பயனற்ற ஆட்சி. அதைக் குப்பையைப் போல் தூக்கியெறிய வேண்டும். அ.தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

முதியோர் உதவித்தொகை வழங்கப் பணமில்லை. ஆனால், ஆயிரம் கோடி ரூபாய்க்கு விளம்பரம் கொடுக்கப் பணம் இருக்கிறது. அதுவும் தமிழகம் வெற்றி நடைபோடுகிறது என்று பொய் விளம்பரம் செய்கின்றனர். அவர்களுக்கு வேண்டுமானால் அது வெற்றி நடையாக இருக்கலாம். ஆனால், மக்களுக்கு அல்ல.

டெண்டர்கள் அனைத்தையும் அவர்கள் உறவினர்களுக்குத்தான் கொடுக்கின்றனர். ஆனால் உலகளாவிய டெண்டர் என்கின்றனர். அலிபாபா குகை போல், அவர்களது உறவினர்களுக்கு மட்டுமே டெண்டர் திறக்கும்.

அ.தி.மு.க ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். ரேஷன் பொருட்களைக் கூடத் தரமில்லாமல் வழங்குகின்றனர். கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு எதுவும் செய்யாமல் பிளீச்சிங் பவுடர், முகக்கவசம், துடைப்பம் வாங்கியதில் ஊழல் செய்துள்ளனர்.” எனக் குற்றம்சாட்டினார்.