Tamilnadu
உதவிப்பேராசிரியர் பணிக்கு PhD கட்டாயமா? இடஒதுக்கீடு, சமூக நீதியை குறி வைத்து தகர்க்கும் சதி - கி.வீரமணி
கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பி.எச்டி., ஆய்வுப்படிப்பு கட்டாயம் என்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கிவரும் பல்கலைக்கழக மானியக்குழுவின் உத்தரவினை அப்படியே ஏற்றுக்கொண்டு தமிழக அரசின் உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டதன் மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி, இடஒதுக்கீட்டு வாய்ப்புகளை அறவே பறித்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு உடனடியாக உயர்கல்வித்துறையின் அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் முழு விவரம் பின்வருமாறு:-
“கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான பணிநியமனங்களில், தமிழ்நாட்டில் மாநில அரசு நடத்தும் ‘செட் தேர்வு (State Eligibility Test -SET)’மற்றும் தேசிய தேர்வு முகமை நடத்தும் ‘நெட் தேர்வு (National Eligibility Test - NET)’ ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
பல்கலைக் கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி (யூஜிசி) அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ‘செட்’ மற்றும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களும், பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்களும் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘செட்’ தகுதித் தேர்வை நடத்தப்படவில்லை. மத்திய அரசின் யுஜிசி ஆணையை அப்படியே ஏற்று, ஜூலை 1 முதல் பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுவார்கள் என்று தமிழக அரசின் உயர்கல்வித் துறை அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.
முதுகலை மற்றும் எம்.பில்., பட்டம் பெற்று, அதன்பின்னர் ‘செட்’, ‘நெட்’ தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் கிராமப்புற மாணவர்கள் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பு பெற போராடி வரும் நிலையில், இனி பி.எச்.டி., ஆய்வுப் படிப்பை முடித்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றால், இதன்மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின,பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி, இடஒதுக்கீட்டு வாய்ப்பு பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதா? இல்லையா?
ஏழை, எளிய, கிராமப்புற அடித்தட்டு முதல் தலைமுறையாக படிக்கும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் முதுகலை, எம்.பில்., படித்துவிட்டு அதற்கு மேலும் பி.எச்.டி., ஆய்வு மேற்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமானதல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.
தொடர்ந்து சமூக நீதியையும், இட ஒதுக்கீட்டையும் குறிவைத்து தகர்க்கும் நிலையில் முழுமூச்சாக மத்திய பிஜேபி ஆட்சி தொடர்ந்து தீவிரம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது. அண்ணா பெயரில் இருக்கக்கூடிய தமிழக ஆளுங்கட்சி இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமலும், சமூகநீதிக்கு விரோதமான மத்திய அரசின் போக்கு குறித்து கருத்துகூட கூறாமலும், கண்டிக்காமலும் இருப்பது ஏன்?
தமிழ்நாட்டு மக்களின் சமூக நீதி உணர்வினை வலிமையாக எடுத்துக்கூறி மத்திய அரசின் யுஜிசி முடிவை விலக்கிக்கொள்ள உறுதியாக தமிழ்நாடு அரசு போராட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்களான தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் இவர்களை அடையாளம் காண வேண்டும்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!