Tamilnadu
உதவிப்பேராசிரியர் பணிக்கு பிஎச்டி படித்திருக்க வேண்டுமா? - அதிமுக அரசின் அரசாணைக்கு வைகோ கடும் எதிர்ப்பு!
உதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெறுக என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான அவரது அறிக்கையில்,
“தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மாநில அரசு நடத்தும் ‘செட் தேர்வு (State Eligibility Test -SET)’ மற்றும் தேசிய தேர்வு முகமை நடத்தும் ‘நெட் தேர்வு (National Eligibility Test - NET)’ ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
பல்கலைக் கழக நிதி நல்கைக் குழுவின் வழிகாட்டுதலின்படி (யூஜிசி) அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ‘செட்’ மற்றும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களும், பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்களும் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். உயர்கல்வித் துறை பல்கலைக் கழகங்கள் மூலமாக நடத்தி வந்த ‘செட்’ தகுதித் தேர்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தவில்லை.
இந்நிலையில் வரும் ஜூலை 1 முதல் பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுவார்கள் என்று தமிழக அரசின் உயர்கல்வித் துறை அரசாணை பிறப்பித்து இருக்கின்றது. பல்கலைக் கழக நிதி நல்கைக் குழு நிர்ணயித்துள்ள விதிகளின் கீழ் இந்த அரசாணை வெளியிடப்பட்டு இருப்பதாக உயர்கல்வித் துறை கூறி இருக்கின்றது.
முதுகலை மற்றும் எம்.பில்., பட்டம் பெற்று, அதன்பின்னர் ‘செட்’, ‘நெட்’ தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் கிராமப்புற மாணவர்கள் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பு பெற போராடி வரும் நிலையில், இனி பி.எச்.டி., ஆய்வுப் படிப்பை முடித்தால் மட்டுமே விண்ணபிக்க முடியும் என்று தகுதி நிர்ணயித்து இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
ஏழை கிராமப்புற மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மற்றும் பழங்குடி மாணவர்கள் முதுகலை, எம்.பில்., படித்துவிட்டு அதற்கு மேலும் பி.எச்.டி., ஆய்வு மேற்கொள்வது என்பது முயற்கொம்புதான். அதற்கு பொருளாதார சூழலும் இடம் தராது.
எப்படியாவது கல்லூரிப் படிப்பை முடித்து, வேலைவாய்ப்புத் தேடி நகர வேண்டிய சூழலில் இருக்கும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பி.எச்.டி., ஆய்வுப் படிப்பைத் தொடருவதற்கு கல்வி நிறுவனங்களில் ஊக்கத் தொகையோ, அல்லது மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகையோ அனைவருக்கும் கிடைப்பது இல்லை.
இந்நிலையில், பி.எச்.டி. முடித்தால்தான் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவே முடியும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருப்பது அநீதியாகும். கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடி இன மாணவர்கள் உயர்கல்வித் துறைக்கு பணி வாய்ப்புப் பெற்று வந்துவிடக்கூடாது என்ற வன்மம் நிறைந்த ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் சனாதனக் கூட்டத்தின் குறிக்கோள்களை தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெறச் செய்திருக்கிறது பா.ஜ.க. அரசு. அதன் அடிப்படையில்தான் யூ.ஜி.சி. சமூக நீதிக்கு எதிரான இத்தகைய விதிமுறைகளை வகுத்திருக்கின்றது. அதையே காரணம் காட்டி, தமிழக அரசு இந்த அரசாணையைப் பிறப்பித்து உள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு அளித்திருப்பதைப் பெரும் சாதனையாக பறைசாற்றி பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அரசாணை வெளியிட்டு இருப்பதற்கு என்ன விளக்கம் தரப்போகிறார்?
சமூக நீதியைப் பறிக்கும் இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!