Tamilnadu

வழக்குக்கு பயந்து பா.ஜ.கவிடம் தஞ்சமடைந்த பெண் தாதா : கைது செய்தது புதுச்சேரி போலிஸ்!

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கடந்த மார்ச் மாதத்தில் பதவி ஏற்றதில் இருந்தே அக்கட்சியில் பல ரவுடிகள் இணைந்து வருகின்றனர். கடந்த காலங்களில் பா.ஜ.கவில் இருந்தபோது குற்றவழக்குகளில் சிக்கி பா.ஜ.கவில் இருந்து நீக்கப்பட்டவர்களும் கூட தற்போது மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பா.ஜ.கவில் சினிமா பிரபலங்கள் இணைந்தது போய் தற்போது கட்சியில் பிரபல ரவுடிகள் இணைந்து வருகின்றனர். வரும் 2021ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு யாராக இருந்தாலும் பராவாயில்லை என தனது கட்சி பக்கம் இழுத்து எப்படியாவது டெபாசிட்டையாவது பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க சற்று தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

ஆகையால், சினிமா உள்ளிட்ட துறை சார்ந்த பிரபலங்கள், ரவுடிகள் என அனைவரையும் கட்சிக்குள் சேர்த்து அவர்களுக்கு பதவிகளையும் வழங்கி வருகிறது பாரதிய ஜனதா கட்சி. சமீபத்தில் கூட, செங்கல்பட்டு பகுதியில் ஏரிக்கரையில் மணற்கொள்ளையைத் தடுப்பவர்களைத் தலையை வெட்டிக் கொலை செய்யும் கூலிப்படைத் தலைவன் சீர்காழி சத்யா பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். கோவையில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட மூன்று கொலைகள் உள்பட 5 கொலை வழக்குகளோடு, 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும் இவர் மீதுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல் புதுச்சேரியில், முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார் படுகொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியும் காவல்துறையால் தேடப்பட்டு வந்த பெண் தாதா எழிலரசி தற்போது பா.ஜ.கவில் இணைந்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரை கைது செய்ய காவல்துறைக்கு புதுச்சேரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால் பகுதியைச் சேர்ந்த எழிலரசி மீது கொலை வழக்குகள், மிரட்டி பணம் பறித்தல், வெடிமருந்து பயன்படுத்தல், மோசடி வழக்கு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது இதுவரை 14 வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது வெளியே வந்த எழிலரசி, தொழில் அதிபர் ஒருவரிடம் மிரட்டி பணம் பறித்தலில் ஈடுபட்டதாக கூறி கடந்த 31ம் தேதி காரைக்கால் திருமலைராயன்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து தலைமறைவான எழிலரசி நேற்று முன்தினம் புதுச்சேரி பா.ஜ.க மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் முன்னிலையில், பா.ஜ.கவில் இணைந்தார். மேலும் தன்னை காவல்துறை தேடுவது தெரிந்தே எழிலரசி பா.ஜ.கவில் சேர்ந்துள்ளதாகவும், அவரை பாதுகாக்கும் நோக்கில் பா.ஜ.கவும் அவரை இணைத்துக்கொண்டதாவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பெண் தாதா எழிலரசியை உடனடியாக கைது செய்யவும், இதற்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்யவும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரி பா.ஜ.கவினர் ரடிகளையும் , குண்டர்களையும் கட்சியில் இணைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் பா.ஜ.கவின் தரம் என்னவென்பது தெரிந்துள்ளது. பா.ஜ.க-வில் இணைந்த தேடப்ப்படும் குற்றவாளியான பெண் தாதாவை பிடித்து கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியவர் அவருடன் இருந்தவர்களையும் கைது செய்ய உத்தரவு இட்டதாகக் கூறினார்.

இந்நிலையில் தலைமைறைவாக இருந்த பா.ஜ.கவின் பெண் ரவுடி எழிலரசியை போலிஸார் கைது செய்துள்ளனர்.

Also Read: பா.ஜ.க-வில் இணையும் குற்றப் பின்னணி கொண்டவர்கள்: ஆனால், தலைவருக்கே தெரியாதாம்? -அரங்கேறும் ஏமாற்று நாடகம்