Tamilnadu

43 வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்!

கொரோனா காலகட்டத்தில் கல்லூரிகள் மூடப்பட்டு கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டு 2 மாதம் ஆகும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி 43வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு, தனிச் சட்டம் நிறைவேற்றி அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மற்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசூலிக்கும் அதே கட்டணத் தொகையை வசூலிக்க வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து 43வது நாளாக அறவழியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்தை அடுத்து மருத்துவக் கல்லூரி மறு தேதி குறிப்பிடாமல் காலவரையற்ற மூடல் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை 4 மணிக்குள் விடுதி மற்றும் கல்லூரி வளாகத்தை விட்டு மாணவர்கள் வெளியேற நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

உள் மற்றும் புற நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழலில், தங்களின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்று அரசு மருத்துவக் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தல்.

மேலும் இதுகுறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், “இக்கல்லூரியில் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக 9.6 லட்சமும் இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக 5.5 லட்சமும் அரசு நிர்ணயம் செய்துள்ளது.

அதேபோல் பல் மருத்துவ முதுநிலை மாணவர்களுக்கு ரூபாய் 8 லட்சமும், இளநிலைக்கு ரூ 3.5 லட்சமும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், முற்றிலும் அரசு நிதியில் மக்களுக்காக, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாகச் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், வசூலிக்கப்படும் கல்விக் கட்டணமானது, பிற அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தை விட, 30 மடங்கு கூடுதலானது.

கூடுதல், கல்விக் கட்டணத்தால் மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சல் மற்றும் நிதி நெருக்கடியில் தவிக்கின்றனர். இதனால் கல்வி கட்டண உயர்வைக் கண்டித்து தொடர்போராட்டம் நடத்திவந்த நிலையில், மாணவர்கள் கோரிக்கையை ஏற்காமல் கல்லூரி நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது. பேச்சுவார்த்தை எங்கள் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்றுக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தற்போது, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி அவர்கள் அழைத்ததன் பேரில், போராட்ட கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “அரசு மருத்துவக் கல்லூரியிலேயே 9.6 லட்சம் வரை கட்டண கொள்ளை”: அதிமுக அரசைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!