Tamilnadu
“ரத்தம் சொட்ட சொட்ட காயத்துடன் சுற்றித்திரிந்த ஆண் யானை உயிரிழப்பு” : ஒரே வாரத்தில் 3 யானைகள் பலி !
தமிழகத்தில் நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் தனது வலசுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி நடந்து செல்லும் யானைகள் பல்வேறு விபத்துகளில் பலியாகும் சம்பவம் தொடர்கதையாகிறது.
குறிப்பாக, யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துகள், விவசாய பயிர்களை காக்க விவசாயிகள் கையாளும் தவறான உத்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் கோவையில் மின் வேலியில் சிக்கி ஒரு யானை உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து ஓசூர் அருகே கன்டெய்னர் லாரி மோதிய யானை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது. இந்நிலையில், உதகை அருகே மசினகுடி பகுதியில், காது கிழிந்து ரத்தம் கொட்டுவதுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், சுற்றி திரிந்த ஆண் யானை நேற்றைய தினம் உயிரிழந்தது.
உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியில் 40 வயது மதிக்கதக்க காட்டு யானை கடந்த 10 ஆண்டுகளாக சுற்றி திரிந்தது. இந்த யானைக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்கு கடந்த மாதம் 28-ந்தேதி கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டது.
முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்த பின்னரும் அந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் வருவதுடன் சாலைகளில் நிற்பதையும் வழக்கமாக கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த யானையை சில மர்ம நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதில், அந்த யானையின் இடது காது கிழிந்ததுடன் சில காது பகுதிகளும் துண்டாகி கிழே விழுந்துள்ளது. காது கிழிந்ததால் 3 மணி நேரத்திற்கு மேலாக கடும் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் யானைக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து நேற்றைய தினம் முதுமலை கும்கி யானைகள் உதவியுடன் காயத்துடன் சுற்றித் திரிந்த யானையை, வனத் துறையினர் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி வளைத்தனர். முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஸ்குமார், துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க மருந்து செலுத்தினார்.
பின்னர் கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது, தெப்பக்காடு முகாம் அருகே வந்தபோது லாரியில் நின்றிருந்தவாறு காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர்.
முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஸ்குமார் கூறும்போது, “யானையின் முதுகில் மிக ஆழமாக காயம் இருந்தது. தவிர யானையின் காதில் தீ பந்தத்தை மர்மநபர்கள் வீசியதால், காதின் ஒரு பகுதி சிதைந்து ரத்தம் வழிந்தோடியது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!