Tamilnadu

“40% பாடத்திட்டம் குறைப்பு.. சீருடையில் வந்தால் பேருந்தில் இலவச பயணம்” : நாளை முதல் பள்ளிகள் திறப்பு !

கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தமிழகத்தில் கடந்த ஆண்டு 2020 மார்ச் 25ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. அதனையடுத்து ஆன்லைன் மூலம் மாணாக்கர்கள் கல்வி பயின்று வந்தனர்.

இப்படி இருக்கையில், சரியாக 9 மாதங்களுக்கு பிறகு மாநிலத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்திருப்பதால் ஊரடங்கு அறிவிப்பில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட பின்னரே எந்த முடிவையும் அரசு எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் தெரிவித்தனர்.

இதனையடுத்து பெற்றோர்கள், மாணவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜனவரி 19ம் தேதியில் இருந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நாளை 12 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு வகுப்பு நடத்த பள்ளிகள் வளர்த்த கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகிறது. மேலும் கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளியில் மாணவர்கள் முக்கியமாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அதேபோல் மாணவர்களுக்கு கை கழுவுவதற்கு குறைந்தது 45 நாட்களாவது வழங்க வேண்டும் என்றும் மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விட்டமின் மாத்திரைகள் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை செனாய் நகரில் அமைந்துள்ள திரு.வி.க அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய கண்ணப்பன், தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் நாளை 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக செயல்பட உள்ளது. அதை முன்னிட்டு, கடந்த 2 நாட்களாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட பகுதிகளை தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பள்ளிகள் திறந்த உடன், சுகாதார துறை சார்பில், மல்டி விட்டமின் மற்றும் சிங் மாத்திரைகள் வழங்க எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வார காலத்திற்கு பிறகு, சுகாதார துறை சார்பில், மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதேனைகள் செய்யப்பட உள்ளது.

முதல் 2 நாட்களுக்கு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கொரோனா அச்சம் நீங்கவும், பொது தேர்வை எவ்வாறு கையால்வது என்பது குறித்து மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் உள்ள 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அதை, மாவட்ட அளவிலான பள்ளி இயக்குனர்கள் மற்றும் இணை இயக்கினர்கள நிலையில் உள்ள அதிகாரிகள் சென்று நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக கூறினார்.

10,12 பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை இன்றுக்குள் பள்ளிகள் சென்றடையும் என்ற அவர் 40% வலை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இலவச பேருந்து பயண அட்டை இல்லை என்றாலும் பள்ளி சீருடையில் வந்தாலே அவர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என கூறிய அவர், தமிழகம் முழுவதும் 10, 12 வகுப்பில் பயிலும் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, நபர் ஒருவருக்கு 10 மாத்திரை என்ற அடிப்படையில் 1 கோடியே 92 லட்சத்திற்கும் மேற்பட்ட வைட்டமின் மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

Also Read: “காது கிழிந்து ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடும் உதகை யானை” : வலி காரணமாக நீரில் தஞ்சமடைந்த சோகம்!