Tamilnadu
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கியவர்களுக்கு ‘போலி’ தங்கக்காசு கொடுத்த முதல்வர் எடப்பாடி - புதிய சர்ச்சை!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில், 710 காளைகள், 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.
மேலும் காளைகளை அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கு தங்கக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அதில், மதுரை மாவட்டம், குறவன்குலத்தைச் சேர்ந்த 24 வயதாகும் விஜயன் என்பவர் 8 மாடுகளை பிடித்துள்ளார். அதனால் அவருக்கு நான்கு தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.
இந்நிலையில் பரிசாகப் பெற்ற தங்கக்காசுகளை விஜயனின் தந்தை கணேசமூர்த்தி பரிசோதனை செய்வதற்காக அருகில் உள்ள நகைக்கடைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர் தங்கக்காசுக பரிசோதனை செய்யக்கொடுத்ததில், அந்த தங்கக்காசுகள் தரமற்றவையாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இதுதொடர்பாக கணேசமூர்த்தி கூறுகையில், “எனது மகன் காளைகளை அடக்கியதால், ஒரு கிராம் எடையுள்ள நான்கு தங்கக்காசுகளை பரிசாக வழங்கினார்கள். இந்நிலையில் மகனுக்கு வழங்கப்பட்ட தங்கக்காசுகளை ஆய்வு செய்ததில், 4 தங்கக்காசுகளிலும் மொத்தமாக சேர்த்து வெறும் 500 மில்லி கிராம் மட்டுமே அதில் தங்கம் கலந்துள்ளதாக நகைக்கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
மொத்தமாகவே ஒரு கிராம் அளவுக்குக் கூட தங்கம் இல்லை. செம்பும், இரும்பும் தான் மிக அதிகளவில் கலந்திருப்பதாக தெரிந்தது. பொதுவாக ஒரு கிராம் தங்க நாணயத்தில், ‘916’ ரகம் என்றால் 80 மில்லி கிராம் அளவுக்கு செம்பும், 920 மில்லி கிராம் தங்கமும் இருப்பது வழக்கம்.
ஆனால், ஜல்லிக்கட்டில் பரிசாக வழங்கப்பட்ட இந்த தங்க நாணயத்தில் 100 மில்லி கிராம் அளவுக்குத்தான் தங்கம் இருந்துள்ளது. மீதி 900 மில்லி கிராம் அளவுக்கு செம்பும், இரும்பும் இருப்பது தெரியவந்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையால் கிடைத்த இந்த தங்கக்காசுகள் போலியாக இருப்பது மனவேதனை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசு ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.
அது என்னவென்றால், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் காசுக்காகவோ, பணத்திற்காகவோ விளையாடாமல் வீரத்தை நிலை நிலைநாட்டத்தான் உயிரை பணயம் வைத்து களமிறங்குகின்றனர். எனவே பரிசுப்பொருட்களை போலியாக வழங்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!