Tamilnadu
“வெள்ளத்தில் பயிர்கள்.. கண்ணீரில் விவசாயிகள்.. இடைக்கால நிவாரண நிதியை வழங்கிடுக” கி.வீரமணி வேண்டுகோள்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராகியிருந்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கிப் போனதால விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உழவர் திருநாளான அறுவடைத் திருவிழாவாம் பொங்கல் விழா இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்க கொண்டாட வேண்டியதற்குப் பதிலாக, விவசாயிகள் துயரம் துடைக்கப்பட முடியாத துன்ப வெள்ளத்தில் மூழ்கி வெளியே வர முடியாமல் தவிப்பது வேதனையாக உள்ளது.
பயிர் அறுவடை செய்வதற்குத் தயாரான நிலையில், கடும் மழை எதிர்பாராமல் தொடர்ந்து பெய்த காரணத்தால், பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிட்ட விவசாயிகளின் வேதனை வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாத மிகப்பெரிய அவலம் - பரிதாபம்!
காவிரி டெல்டா பகுதியில் பொங்கல் கொண்டாடி மகிழவேண்டிய நிலையில், கடும் மழை, அழுகிய பயிர்களைக் கண்டு அழுது, தம் உழைப்பு இப்படி இயற்கையின் ஒத்து ழைப்பின்மையால் வீணாக விழலுக்கிரைத்த நீராகி விட்டதே என்ற வேதனை தேள் கொட்டிய நிலையில் உழவர் பெருமக்கள் கண்ணீர் வற்றாது வளர்ந்து வருகிறது!
தண்ணீரில் கதிர்கள் - கண்ணீரில் விவசாயிகள்!
‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’’ என்று பாடிய வள்ளலார் வாழ்ந்த மண்ணில், அழுகிய பயிரைக் கண்டு கண்ணீரில் மிதக்கிறோம் என்று நம் உழவர் சொந்தங்கள் ஒப்பாரி வைக்கும் வேதனை நிலைதான் இன்று உள்ளது!
காவிரி டெல்டா பகுதியில் சம்பா அறுவடைக்குத் தயாராக இருந்த நேரத்தில், பெய்துவரும் கனமழையால் நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்தும், முளைத்துமுள்ள பயிராகவும் காட்சியளிக்கின்றன!
முன்பு ‘நிவர்’ புயல் சேதத்தால் குறுவை அறுவடை செய்யும் நேரத்தில், நெற்பயிர்கள் நாசமாயின. அந்தப் புண் ஆறுவதற்கே மேலும் சில காலம் ஆகும் நிலையில், அவர்களுக்கு இப்படி ஒரு வேதனையான சோதனையா? கடலை, உளுந்து பயிரிட்டவர்களுக்கும் பாதிப்பு அதிகம்.
டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் போன்ற மாவட்டங்களும், கனமழை அதிகம் பெய்த காரணத்தால், திறந்துவிடப்பட்ட அணை கள்மூலம் ஏற்பட்ட வெள்ளக்காடால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களும் பெரும் இழப்பை சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இந்தப் பாதிப்பு உழவர் உறவுகளின் வயிற்றில் அடிப்பதும், வாங்கிய கடனைச் செலுத்த முடியாத வேதனையால் அவர்களின் நெஞ்சில் கனல் ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது!
ஈரப்பதத்தைக் காரணம் காட்டி தமிழக அரசு நெல் கொள்முதலை நிறுத்தியதால், ஏற்கெனவே அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் (மூட்டைகளும்) ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள்மூலம் மற்றும் சாலை யோரங்களில் மழையில் நனைந்தபடி குவிந்து கிடக்கின்றன!
உடனடியாக தேவை இடைக்கால நிவாரணம்
முதலமைச்சரோ, அமைச்சர்களோ அந்த உழவர் மக்களை நேரில் சந்தித்து, ‘உரிய இழப்பீட்டினை வழங்குவோம்; கலங்காதீர்!’ என்று ஆறுதல் கூறி, ஒரு நம்பிக்கை ஒளி ஊட்டாமல் தேர்தல் பிரச்சாரத்தினைத் தீவிரமாக செய்வதில் உள்ளனர்!
தமிழக அரசின் அதிகாரிகள் சிலர் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வது மாத்திரம் போதுமா?
முதலில் ஒரு இடைக்கால நிவாரண உதவியையாவது தமிழக அரசு பாதிக்கப்பட்ட அந்த விவசாயக் குடும்பத்தினருக்கு, போர்க் கால அடிப்படையில் முதலுதவியைப் போல் செய்வதற்கு ஒரு அவசரத் திட்டம் தீட்டப்படவேண்டாமா?
இது ஒருபுறம் - மூன்று விவசாய சட்டங் களை மத்திய அரசு - மாநில அரசுகளையோ, விவசாயிகளின் தலைவர்களையோ, பிரதிநிதிகளையோ கலந்து ஆலோசிக்காமல், கார்ப்பரேட் கனவான்களுக்கு வசதியாக, உழைக்கும் விவசாயிகள் பயிர்களை குறைந்தபட்ச விலைக்குக்கூட விற்பனை செய்ய (M.S.P.) உத்தரவாதம் இல்லாத ஒரு சட்டம் எங்களுக்குக் கேடானவை என்று டில்லித் தலைநகரில், கடந்த 52 நாட்களாக வரலாறு காணாத பொறுமையோடு கட்டுக்கடங்காத விவசாயிகள் கட்டுப்பாடு மீறாது அறப்போரில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 70 பேர் உயிர் நீத்த நிலையில், வன்முறை தலைதூக்காத, வரலாறு கண்டிராத ஒரு புதுமையான போராட்டம் நடைபெறுகின்ற நிலையில், உழவர் திருநாளை உவகையோடு எப்படி நாம் கொண்டாட முடியும்?
எரிமலையாகும் கண்ணீர் - எச்சரிக்கை!
‘‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக் குக்கூட மிஞ்சுவதில்லை’’ என்ற நிலையிலிருந்து என்று மீளுவர் நம் உழவர் உறவுகள்? மத்திய - மாநில அரசுகள் மனிதநேயத் தோடு மக்களாட்சியில் நடந்துகொள்ள வேண்டாமா? விவசாயிகளின் கண்ணீர் எரிமலையாவதற்குள் பரிகாரம் காணுங்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!