Tamilnadu
“வரலாறு காணாத வகையில் ஜனவரியில் பெய்த கனமழை - நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்”: சோகத்தில் டெல்டா விவசாயிகள் !
திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள டெல்டா பாசன விவசாயிகள் பொங்கல் பண்டிகையான இத்தருணத்தில் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
முசிறி அருகே உள்ள கொடுந்துறை, கோட்டூர், ஆமூர், உமையாள்புரம், செவந்தலிங்கபுரம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் காவிரியாற்றின் பாசன வாய்க்கால்கள் மூலம் பயன் பெறும் விவசாய நிலங்கள் நிறைந்துள்ளது.
காவிரி டெல்டாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நாற்று நடப்பட்டு சம்பா நெல் சாகுபடி விவசாயிகளால் செய்யப்பட்டது. தற்போதுநெற்பயிர் கதிர் முற்றி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இன்னும் சில தினங்களில் விவசாயிகள் அறுவடை செய்ய இருந்த சூழலில், கடந்த 15 தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நெற்பயிர் சாகுபடி செய்துள்ள வயலில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தலை சாய்த்து கிடக்கும் நெற்கதிர்கள் முளைவிட்டு வளரத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், “தற்போது டெல்டா பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர். பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த வேதனையில் இருக்கிறோம்.
ஏக்கர் ஒன்றுக்கு சுமார் முப்பதாயிரம் ரூபாய் செலவு செய்து நெல் சாகுபடி செய்த நிலையில் தற்போது நெற்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. ஆனால் கடந்த 15 தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக நெல் வயலில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கதிர் முற்றி தலை சாய்ந்து கிடக்கும் நெற்கதிர்களிலிருந்து பயிர் முளைவிடத் தொடங்கிவிட்டது.
தண்ணீரில் மூழ்கி கிடக்கும் நெற்பயிரும் அழுக தொடங்கியுள்ளது. இதனால் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சில விவசாயிகள் நெற்பயிர் காப்பீடு செய்துள்ளனர். ஒரு சில விவசாயிகள் காப்பீடு செய்யாமலும் இருக்கின்றனர்.
குறிப்பாக கொடும் துறை கிராமத்தில் 612 ஏக்கர் பரப்பளவிலும், கோட்டூர், ஏவூர், ஆமூர் கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலும், உமையாள்புரம், செவந்லிங்கபுரம், அய்யம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் 350 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் பெருத்த சேதம் அடைந்துள்ளது.
எனவே தமிழக அரசு நெற்பயிர் சேதமடைந்துள்ள விவசாயிகளின் நிலங்கள் குறித்து வருவாய்த் துறை அலுவலர்கள் மூலம் உரிய கணக்கெடுத்து அதற்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
சாகுபடி செய்துள்ள நெல் தானியத்தை விற்பனை செய்து லாபம் ஈட்டும் சூழல் மாறி எங்களது உணவிற்கே கடைகளில் அரிசி வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக அறிவித்து வழங்க வேண்டும்” என்று கூறினார்.
அதேப்போல், திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியதால் அறுவடை திருநாளை கொண்டாட முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை விவசாயிகள்
வடிகால் வழியாக வெளியேற்றிய நிலையிலும் கூட பல்வேறு வயல்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்கிறது. பல வயல்களில் நெற்பயிர்கள் சேற்றோடு சேறாக கிடப்பதை காண முடிகிறது. நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தினசரி வயலுக்குச் சென்று தலைசாய்த்து சேற்றுடன் சேறாக கிடக்கும் நெற்பயிரை பார்த்து மனம் கலங்கி நிற்பதை காணும்போது நெஞ்சை நெகிழச் செய்வதாக உள்ளது.
Also Read
-
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
-
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
-
“கருப்பி.. என் கருப்பி...” : பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாய்க்கு தீபாவளியன்று நேர்ந்த சோகம்!
-
“தனித்துவத்தை நிலைநாட்டும் தமிழ் மொழி!” : கேரளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?