Tamilnadu

உள் விளையாட்டரங்கம் கட்டுவதில் பல லட்சங்களை சுருட்டிய அ.தி.மு.க தி.நகர் எம்.எல்.ஏ - RTI ஆர்வலர் புகார்!

சென்னை தியாகராய நகர் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சத்தியநாராயணன், தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்துள்ளது குறித்து சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆர்.டி.ஐ ஆர்வலர் ஒருவர் ஆதாரங்களுடன் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், “சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் B.சத்தியநாராயணன். 2016-ம் ஆண்டு நடைபெற்ற 15 வது சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். அவரது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடுவதில் அப்பட்டமான முறைகேடு நடந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்தியநாராயணன் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 2016-17 ஆண்டில் சென்னை மாநகராட்சியின் 10-வது மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் 135 பக்தவச்சலம் சாலையில் இருக்கும் விளையாட்டு திடலில் உள்விளையாட்டு அரங்கம் (இறகுப்பந்து கூடாரம்) அமைப்பதற்கு அடித்தளம் அமைப்பதற்காக 23 லட்சத்து 73 ஆயிரத்து 900 ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

2)அதே உள்விளையாட்டு அரங்கத்திற்கு தரைத்தளம் அமைப்பதற்காக மீண்டும் 18 லட்சத்து 83 ஆயிரத்து 200 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

3) மீண்டும் அதே உள்விளையாட்டு அரங்கத்திற்கு மரத்தால் ஆன தரை அமைக்கும் பணிக்காக 21 லட்சத்து 11 ஆயிரத்து 900 ருபாய் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.

அதே 2016-17 ஆண்டில் மீண்டும் அதே உள்விளையாட்டு அரங்கத்திற்கு மேற்கூரை அமைக்கும் பணி என்ற வகையில் 18 லட்சத்து 5900 ருபாய் செலவிடப்பட்டுள்ளது.

பின்னர், 2017-18 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் மீண்டும் அதே 10 வது மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் 135-ல் அதே உள்விளையாட்டு அரங்கத்திற்கு எலக்ட்ரிகல் லைட் (மின்விளக்குகள்) அமைக்கும் பணிக்காக 20 லட்சத்து 94 ஆயிரத்து 400 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து பணிகளையும் வெற்றி கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற ஒரே நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் தடை செய்யப்பட்ட பணிகள் பிரிவு 3;9 முழுமையாக முடிக்கப்பட்ட பணிகள், பகுதியாக முடிக்கப்பட்ட பணிகள் அல்லது இனங்களுக்கான தொகை மீள்செலுத்துதல் கூடாது. பிரிவு; 3;10 அனைத்து வரவினங்கள் மற்றும் தொடர் செலவினங்கள் எதிர்மறையான / தடை செய்யப்பட்ட பணிகள் பட்டியலில் வருகிறது.

ஆனால், சட்டமன்ற உறுப்பினர் சத்தியநாராயணன் வரையறுக்கப்படாத கூறு நிதியில் தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையில் மேலே குறிப்பிட்டுள்ள உள்விளையாட்டு அரங்கத்திற்கு தன்னுடைய நிதியை செலவளித்துள்ளார். பொதுப்பணித்துறையின் ஷெட்யூல் படி செலவளித்திருந்தாலும் கூட மேலே குறிப்பிட்டுள்ள உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு 50 லட்ச ரூபாய் கூட தாண்டியிருக்காது.

ஆனால், நிதிமுறைகேடு செய்யவேண்டும் என்ற காரணத்தின் அடிப்படையில் உள்விளையாட்டு அரங்கு கட்டும் பணிகளை, சென்னை மாநகராட்சி அதிகாரிகளை நிர்பந்தம் செய்து 5 கட்டங்களாக பிரித்து அப்பட்டமான மோசடியில் சட்டமன்ற உறுப்பினர் சத்திய நாராயணன் ஈடுபட்டுள்ளார்.

மேலே குறிப்பிட்டுள்ள உள்விளையாட்டு அரங்கத்திற்கு மின்விளக்குகள் அமைக்க அதிகபட்சம் செலவிட்டால் கூட இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் ஆகாது.. ஆனால், சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் எலக்ட்ரிகல் லைட் (மின்விளக்குகள்) அமைக்கும் பணிக்காக 20 லட்சத்து 94 ஆயிரத்து 400 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சின் 6வது மண்டலம் கோட்டம் 66-ல் ஜவஹர் நகர், முதல் சர்க்கிள் சாலையில் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வெறும் 33 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாயில், 2017-2018-ம் ஆண்டில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கிட்டத்தட்ட 1 கோடியே 1 லட்சத்து 55 ஆயிரத்து 494 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கத்தோடு ஒப்பிடுகையில், தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்தியநாராயணன் தொகுதி நிதி கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகம் செலவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சின் இரு வேறு கோட்டங்களில் ஒரே மாதிரியான உள்விளையாட்டு அரங்கம் கட்ட எப்படி இவ்வளவு பெரிய தொகை வித்தியாசம் வரும் என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

முழுக்க முழுக்க தமிழக அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்ட செயலாக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டது மட்டுமின்றி, சென்னை மாநகராட்சி அதிகாரிகளை நிர்பந்தித்து தொகுதி மேம்பாட்டு நிதியில், அதிகாரிகள் துணையோடு பகிரங்க மோசடியிலும் அப்பட்டமான முறைகேட்டிலும் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்தியநாராயணன் ஈடுபட்டுள்ளார்.

தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்தியநாராயணன் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி ஆணையர், 10வது மண்டல உதவி ஆணையர், செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் சட்டத்திற்கு புறம்பாக திட்டப்பணிகளை மேற்கொண்டு மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.

ஆகவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ள தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்தியநாராயணனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடிக்கு உதவிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மேலும் முழுமையாக தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி சட்டத்திற்குட்பட்டு செலவழிக்கப்பட்டுள்ளதா ? என்னென்ன மோசடிகள் நடைபெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.” என அந்தப் புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கொரோனா நோயாளிகளுக்கு வழங்கிய உணவுக்கு காசு தராமல் இழுத்தடிக்கும் அதிமுக அரசு: ஓட்டல் உரிமையாளர்கள் வேதனை!