Tamilnadu
ஜன.,19 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு.. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கே அனுமதி!
கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தமிழகத்தில் கடந்த ஆண்டு 2020 மார்ச் 25ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. அதனையடுத்து ஆன்லைன் மூலம் மாணாக்கர்கள் கல்வி பயின்று வந்தனர்.
இப்படி இருக்கையில், சரியாக 9 மாதங்களுக்கு பிறகு மாநிலத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்திருப்பதால் ஊரடங்கு அறிவிப்பில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட பின்னரே எந்த முடிவையும் அரசு எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் தெரிவித்தனர்.
இதனையடுத்து பெற்றோர்கள், மாணவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜனவரி 19ம் தேதியில் இருந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில், “பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறி முறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.
அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்த நாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!