Tamilnadu

“220 கி.மீ தூரம்.. 2.20 மணிநேரத்தில் பயணம்”: குழந்தையின் உயிரைக் காக்க கைகோர்த்த ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள்!

தஞ்சாவூரைச் சேர்ந்த ஜீவா- முத்துலட்சுமி தம்பதியரின் இரண்டரை மாத ஆண் குழந்தை ஆரூரான். குழந்தைக்கு இருதயத்தில் பாதிப்பு இருந்து வந்துள்ளது. தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில், உடனடியாக கோவையில் உள்ள இருதய மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தஞ்சையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பார்த்தசாரதி என்பவர், குழந்தை ஆரூரான் மற்றும் அவரது தாயார் மற்றும் செவிலியருடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கோவை நோக்கி அதிவேகமாகச் சென்றுள்ளார். வழியில், போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒவ்வொரு இடத்திலும் ஆம்புலன்ஸ் வேகத்தைக் குறைக்கும் நிலை ஏற்பட்டது.

திட்டமிட்டபடி குறித்த நேரத்திற்குள் கோவை செல்ல முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஓட்டுநருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த பதட்டமான நேரத்திலும், சரியான முடிவெடுத்த அவர், கரூரில், உள்ள அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுநர் நல சங்க மாவட்ட செயலாளர் பாரதிதாசனை தொடர்புகொண்டு தங்களது வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி உதவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சங்கத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் கரூர் மாவட்டத்தில் செயல்படும் மற்ற ஓட்டுனர் சங்க வாகனங்களையும் அனுப்பி திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே வந்த ஆம்புலன்ஸை எதிர்கொண்டு, சாலையில் நெரிசல் ஏற்படாத வகையில் ஆங்காங்கே தடுத்து உதவியதால், திருச்சி மாவட்ட எல்லையில் இருந்து கரூர் மாவட்ட எல்லை வரை போக்குவரத்து நெரிசல் சிக்காதவாறு மின்னல் வேகத்தில் கடக்க துணை நின்றனர்.

மேலும், வெள்ளகோவில், காங்கேயம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆம்புலன்ஸ் ஒட்டுநர்களுக்கு இத்தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கோவை இந்த ஆம்புலன்ஸ் மருத்துவமனை செல்லும் வரை 30க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உதவிக்கரம் நீட்டி கைகோர்த்து துணை நின்றுள்ளனர்.

இதன் காரணமாக, திருச்சி எல்லையில் இருந்து கோவை மருத்துவமனை வரை சுமார் 220 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி 20 நிமிடங்களில் கடந்துள்ளார். இந்நிகழ்வு, சாலையில் சென்ற அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் இந்தச் செயலுக்கு, அந்தந்த பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர்களும் துணைபுரிந்துள்ளனர்.

இதுதொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பலரின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்று வருகிறது. மேலும், அந்தக் குழந்தையின் மருத்துவ உதவிக்காக தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டுனர் நல சங்க உறுப்பினர்களிடையே நிதி வசூல் செய்து கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: “பா.ஜ.க அரசின் பி.எம் கிசான் திட்டத்தில் முறைகேடு - ரூ.1,364 கோடி நிதி மோசடி”: RTI-யில் அதிர்ச்சி தகவல்!