Tamilnadu

“பொங்கல் பரிசு வழங்குவதில் முறைகேடு” : இறந்தவரின் பெயரில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது அம்பலம்!

கொரோனா காலத்தில் மக்கள் வேலையின்றி தவித்த நேரத்தில் நியாய விலை கார்டுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்குங்கள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு ஆலோசனை வைத்தார். அப்போது தேவையான உதவிகள் செய்யாமல் தேர்தல் வருவதை தொடர்ந்து, ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2500, வேட்டி, சேலை அரிசி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

கடந்த 4 - ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் உள்ள கார்டுகளுக்கு போதிய பணம் மற்றும் பொருட்கள் வழங்கவில்லை என புகார் உள்ளது. மேலும் மோசடி நடை பெறுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் கோட்டாறு இசங்கன்விளையை சேர்ந்தவர் பொன்னையா இவரது தாய் சுந்தரவடிவு கடந்த இரண்டு ஆண்டுக்களுக்கு முன் இறந்துவிட்டார். கடந்த 2018ம் ஆண்டு இறந்து போன பொன்னையாவின் தாய் பெயரை கையெழுத்திட்டு பொங்கல் பணம் ரூ.2500 பொங்கல் பொருட்கள் பெற்றதாக தகவல் வந்தது.

இறந்து போன பின்னர் அவரது ரேஷன் கார்டுக்கு இரண்டு ஆண்டுகளாக பொருட்கள் வாங்கவில்லை. இந்நிலையில், பொங்கல் பரிசு மற்றும் ரூ.2500 பணம் வழங்கப்பட்டதாக வயதான பெண்ணின் மகன் பொன்னையாவிவின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் ரேஷன் கடையில் சென்று விசாரித்துள்ளார். அப்போது பதிவேட்டில், மூதாட்டியின் பெயரை கையெழுத்திட்டு யாரோ பணம் பெற்றிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்களுடன் பொங்கல் பரிசு மோசடியில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வலியுறுத்தி அவர் மாவட்ட ஆட்சியரிடம் ஆன்லைனில் புகார் செய்தார்.

மேலும் இதுபோன்ற மோசடிகளில் ரேசன் கடை ஊழியர்கள் மற்றும் ஆளும் கட்சிகள் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் ஓவ்வொரு ரேசன்கடையிலும் அதிகாரிகள் ஆய்வுசெய்து மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: “220 கி.மீ தூரம்.. 2.20 மணிநேரத்தில் பயணம்”: குழந்தையின் உயிரைக் காக்க கைகோர்த்த ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள்!