Tamilnadu

நீலகிரி : “வனத்துறையின் கெடுபிடியால் கொத்தடிமையாக வாழும் பழங்குடியின மக்கள்” - எடப்பாடி ஆட்சியின் அவலம்!

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்குள்ள வனப்பகுதிகளில் நூற்றாண்டைக் கடந்து குறும்பர், காட்டு நாயக்கர் போன்ற பழங்குடியினர் மக்கள் யானைப்பாடி, தேக்கம் பாடி , லைட் பாடி போன்ற குக்கிராமங்களில் நான்கு தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு வாழ்ந்து வரும் பழங்குடியினர் மக்கள்தான் காட்டு யானைகளை பிடித்து அதற்க்கு கும்கி பயிற்சி அளிப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள், அதேபோல் தமிழகம் கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடிக்க இங்குள்ள பழங்குடியினர் சென்று தான் அதைக் கட்டுப்படுத்துவது வழக்கம்.

இவ்வளவு திறமை வாய்ந்த பழங்குடியின மக்களை முதுமலை புலிகள் காப்பகம் என்ற பெயரில் சுதந்திரம் பெற்ற நாட்டில் மண்ணின் மைந்தர்களாக கருதப்படும் பழங்குடியினர் மக்களை கொத்தடிமையாக நடத்தி வருவது தற்போது வெளி வந்துள்ளது. 75 ஆண்டுகளை கடந்து வசிக்கும் மக்களுக்கு தொகுப்பு வீடுகள் உள்ளது.

தற்போது இவர்களின் குடும்பம் பெரிதாகி உள்ள நிலையில் இவர்களுக்கு வீடுகளைக் கட்ட வனத்துறையினர் தடை விதித்து இருப்பதால், இந்த வீடுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் ,மகள், மருமகள், மருமகன், பேரன்கள் என மூன்று குடும்பங்கள் ஒரே வீட்டில் வாழும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல், இந்த கிராமத்திற்கு உள்ளாட்சி மூலம் சாலை, குடிநீர் போன்ற வசதிகள் செய்து தர முன்வந்தால் வனத்துறையினர் அதற்கு தடை விதித்து எவ்வித வளர்ச்சி பணியும் பழங்குடியினர் கிராமங்களுக்கு செல்லாமல் தடுத்து வருகின்றனர். இதன் வேதனையின் உச்சம் என்னவென்றால் நாடு சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்காமல் வனத்துறையினர் தடை போட்டு உள்ளதால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பயன்படுத்தும் மாயார் ஆற்றுத் தண்ணீரை இந்த பழங்குடியினர்கள் குடித்து வாழ்ந்து வருவது வேதனையின் உச்சம் ஆகும்.

முதுமலை வனப்பகுதி புலிகள் காப்பகமாக மாற்றப்படும்போது இந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினரின் படித்த குழந்தைகளுக்கு வனத் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என வனத்துறையினர் உறுதியளித்த நிலையில் இந்த கிராமத்தில் பி.எஸ்.சி பி.காம் போன்ற உயர் பட்டதாரி பழங்குடியினர்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் இவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது எட்டாக்கனியாக உள்ளதாக படித்த பட்டதாரி பழங்குடியினர் இளைஞர்களின் தந்தை வேதனை தெரிவிக்கின்றார்.

தங்கள் கிராமத்திற்கு கழிப்பிட வசதி செய்து தர சில அமைப்புகள் முன்வந்தும் வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் சுகாதாரமான முறையில் தங்களால் கழிப்பிடம் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பழங்குடியினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வெளியே தெரிவித்தால் கிராமத்தை காலி செய்து விடுவதாகவும் வனத்துறையினர் மிரட்டி வருவதால் கொத்தடிமையாக முதுமலை புலிகள் காப்பகத்தில் பழங்குடியினர் வாழ்ந்து வருவது 2006 வன உரிமைச் சட்டத்தின் படி விதி மீறலாகும்.

இவர்கள் பயன்படுத்தும் சாலையை மாலை 6 மணிக்கு மேல் பூட்டி வைப்பதால் இரவு ஆறு மணிக்கு மேல் வனப்பகுதியில் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர். தி.மு.க தலைவர் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட மின்சாரம் மற்றும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி மட்டுமே இவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சாதனையாகும்.

வனப்பகுதியில் 75 ஆண்டுகளை கடந்து வாழும் மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்ட வனத்துறையினர் தடை விதித்திருக்கும் அதே வேளையில் முதுமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் பயன்படுத்த அதே பகுதியில் ஆடம்பர கட்டிடம் கட்டி வருவது நியாயம் தானா என்ற கேள்வியும் பழங்குடியினர் எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் விடியலை நோக்கி காத்திருக்கும் பழங்குடியினர் நிலைமை என்று மாறும் என்ற ஏக்கத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கு எப்போது விடியல் பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: மதவெறிக்கு உலை வைக்கும் ‘சமத்துவப் பொங்கல்’.. வெற்றியின் விளைச்சலுக்கான விழா! - மு.க.ஸ்டாலின் மடல்