Tamilnadu
“தமிழகத்தில் நடக்கும் அநியாய, சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள் நெருங்குகிறது” : மு.க.ஸ்டாலின் !
“இராயபுரம் தொகுதியில் பல முறை சட்டமன்ற உறுப்பினராகவும் - அமைச்சராகவும் உள்ள திரு. ஜெயக்குமாரால் அப்பகுதியில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா?”
“பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான தி.மு.க. மகளிரணியின் கண்டனக் கூட்டத்தைத் தடுக்கும் அளவுக்கு தமிழகத்தில் நடைபெற்று வரும் அநியாய, சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள் நெருங்குகிறது” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (10-01-2021) சென்னை வடக்கு மாவட்டம், இராயபுரம் சட்டமன்றத் தொகுதி, ஆண்டியப்ப கிராமணி தெருவில் நடைபெற்ற மக்கள் வார்டு சபைக் கூட்டத்தில் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றினார்.
நான் முதலில் 23-ஆம் தேதி, வங்கக் கடலோரத்தில் ஆறடி சந்தனப் பேழையில் உறங்கிக் கொண்டு இருக்கும் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டம் குண்ணம் பகுதியில் முதலில் தொடங்கி வைத்தேன். அதற்கு அடுத்து விழுப்புரம் மாவட்டத்திற்குச் சென்றேன். தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்திற்குச் சென்றேன். தலைவர் கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்திற்குச் சென்றேன். இப்படிப் பல மாவட்டங்களில் இந்தப் பயணத்தை நான் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறேன்.
நான் மட்டுமல்ல, நம்முடைய கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள், பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் மற்றும் துணைப் பொதுச்செயலாளர்கள், அந்தந்த மாவட்டத்தைச் சுற்றி இருக்கும் பல பகுதிகளில் நடக்கக்கூடிய கூட்டங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் மட்டுமல்ல, நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தலைமைக் கழகத்தின் சார்பில் முன்னணியினர், நம் கழக அணிகளுடைய செயலாளர்கள், மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி அவர்கள், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அனைவரும் ஒவ்வொரு பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இப்படி எல்லோரும் பிரித்துக்கொண்டு செல்கிறோம். ஏனென்றால் மொத்தம் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், தமிழ்நாட்டில் இருக்கின்றன. அது மட்டுமின்றி நகரப்பகுதிகள், வார்டு பகுதிகள் இருக்கின்றன. எல்லாப் பகுதிகளிக்கும் செல்ல வேண்டும் என்று அந்தப் பணியை நாம் செய்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது ராயபுரம் தொகுதிக்கு நான் வந்திருக்கிறேன். வடசென்னையில் இருக்கும் இந்தத் தொகுதிக்கு நான் வந்திருக்கிறேன்.
இந்த இராயபுரம் பகுதிக்கு பெரிய வரலாறு இருக்கிறது. இந்த இராயபுரத்தில்தான் அறிஞர் அண்ணா அவர்கள், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வருகின்ற போது எப்பொழுதும் தங்குவார்கள். அதுமட்டுமில்லாமல் தி.மு.க. தொடங்க வேண்டும் என்று இங்கு முடிவு செய்தார். 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை, இந்த இராயபுரம் தொகுதியில் உள்ள ராபின்சன் பூங்காவில்தான் தொடங்கி வைத்தார் என்பதும், இராயபுரம் தொகுதிக்கு இருக்கும் மிகப்பெரிய வரலாறு.
எனவே அந்த வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் இந்த இராயபுரத்தில் இன்றைக்கு உங்களையெல்லாம் சந்திப்பதில் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.
அண்ணா அவர்கள் இராயபுரத்தில் தங்கி திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், தலைமை அலுவலகத்தையும் முதன்முதலில் இராயபுரத்தில்தான் அமைத்தார்கள்.
அதுதான் இன்றைக்கு அறிவகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த அறிவகம், இப்பொழுது ஏழை எளிய மக்களுக்குத் திருமண மண்டபமாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த மக்கள் கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவித்தோம். அவ்வாறு அறிவித்து, அதனைத் தொடங்கியபின் அதை நடத்தக்கூடாது என்று பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. அரசு தடை போட்டு விட்டது.
கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் நடத்தக் கூடாது, தடை போடுகிறோம் என்று அறிவித்தார்கள். எனவே நாம் “மக்கள் கிராம சபைக் கூட்டம்“ என்ற பெயரில் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இது கிராமம் அல்ல, மாநகரம். அதனால் இது மக்கள் வார்டு சபைக் கூட்டமாக நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. நாம் எதைச் செய்தாலும் அதற்குத் தடை போடுவதுதான் அ.தி.மு.க. அரசின் வழக்கம். அதேபோலத்தான், கிராம சபைக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று தடை போட்டார்கள். எதற்கு இதைத் தடை செய்ய வேண்டும்? இதனால் பொதுமக்களுக்கு இடையூறு இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகிறதா? நாம் அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து, இப்படிக் கூட்டம் கூட்டுவதற்குத் தடை போட்டார்கள். அந்தத் தடையை மீறி நாம் நடத்துவோம் என்று நடத்திக் கொண்டிருக்கிறோம்.
என்ன தடை போட்டாலும், அதை மீறி நடத்தக் கூடிய சக்தி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு என்பதை நிரூபித்து, நாம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். கொலை வழக்கு நம் மீது போடப்பட்டதில்லை. ஊழல் வழக்கு நம் மீது நிரூபிக்கப்பட்டதில்லை. அரசியல் ரீதியாக என்ன வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள். அதைப் பார்த்துக் கொள்ளக்கூடிய ஆற்றலை பேரறிஞர்அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் தந்திருக்கிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் உங்களுக்குத் தெரியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நாடு முழுவதும் அதைப் பேசிக் கொண்டிருந்தார்கள். பொள்ளாச்சியில் 250 இளம்பெண்களைக் கடத்திக் சென்று, ஒரு பங்களாவில் அடைத்து வைத்து, அவர்களைக் கட்டாயப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
அத்தோடு விடாமல், அதனை வீடியோ எடுத்து - நீ மீண்டும் வரவில்லை என்றால் இதை இணையதளங்களில் வெளியிட்டு விடுவோம், சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் - என்று மிரட்டி, அச்சுறுத்தி இருக்கிறார்கள். அவை சில இணையதளங்களில் வந்ததை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். "அண்ணா என்னை விட்டு விடுங்கள்" என்று கெஞ்சுவதை எல்லாம் நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்த விஷயம் வெளியே வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலேயே வெளியே வந்துவிட்டது. தி.மு.க. தான் இதை முதலில் கையில் எடுத்தது. நீதி விசாரணை தேவை என்று நாம் கூறினோம்.
அதற்குக் காரணம், இதில் ஆளுங்கட்சிக்குத் தொடர்பு இருக்கிறது. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், துணை சபாநாயகராக இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் இதில் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்று நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற ஊடகங்களில் செய்தி வெளியிட்டார்கள்.
அவருடைய தலைமையில்தான் இந்தக் கொடுமை நடந்திருக்கிறது. விசாரணை செய்யவேண்டும் என்று நாம் போராட்டம் நடத்தி, நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார்கள். சி.பி.ஐ. விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையே ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்களை எல்லாம் எப்படியாவது தப்பிக்க வைப்பதற்காக எவ்வளவோ முயற்சிகள் எடுத்து, இவர்கள் யாரையும் கைது செய்யாமல் இந்த அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
ஆனால் இப்பொழுது 4 நாட்களுக்கு முன்னால் சி.பி.ஐ. 3 பேரைக் கைது செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர் யார் என்றால், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாணவரணிச் செயலாளராக பொறுப்பில் இருப்பவர். கட்சிப் பொறுப்பில் மட்டுமல்ல, அவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் வேண்டியவர். தோள் மேல் கை போட்டுக் கொண்டு, கட்டிப்பிடித்துக்கொண்டு எடுத்த புகைப்படம் எல்லாம் வெளியே வந்தது. இப்படிப்பட்ட நிலையில் விசாரணை வேகப்படுத்தப்பட்டிருப்பது ஓரளவுக்கு நமக்கு திருப்திதான். நியாயம் கிடைக்கப் போகிறது, நீதி கிடைக்கப் போகிறது.
ஆனால், இதற்கிடையே இதை விரைவுபடுத்த வேண்டும், வேகப்படுத்த வேண்டும், வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் என்று சொல்லி, இன்றைக்கு நம்முடைய மகளிர் அணியின் சார்பில், பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு, முறையாக காவல்துறையிடம் அனுமதி வாங்கி, நடத்தப்படும் என்று அறிவித்தோம். அதன்படி அந்தப் போராட்டத்தை நடத்துவதற்காக, கனிமொழி அவர்கள் காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் தங்கி இருந்த இடத்தில் இருந்து, அந்தக் கூட்டத்திற்குப் போகும் போது காவல்துறையினர் தடுத்து விட்டார்கள்.
அதுமட்டுமின்றி, அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பல இடங்களிலிருந்து நிறைய மகளிர் வந்திருந்தனர். அவர்களை எல்லாம் வரக்கூடாது என்று காவல்துறையினர் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.
அவ்வாறு போராட்டம் நடந்தால், அ.தி.மு.க. அரசின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் அல்லவா? அதற்காகத் திட்டமிட்டு இதைத் தடுக்க முயற்சித்தார்கள். அப்பொழுது கனிமொழி அவர்கள் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார்கள். இதேபோல, எங்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள் என்ன செய்வது என்று கேட்டார்கள். தடுத்து நிறுத்தினால் அந்தத் தடையை மீறிச் செல்லுங்கள், கவலைப்படாதீர்கள் என்று நான் கூறினேன்.
அந்தத் தடையை மீறிச் சென்று விட்டார்கள். அப்பொழுதும் விடவில்லை. அதற்குப் பிறகு நான் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரை அழைத்து, டி.ஜி.பி.யிடம் பேசச் சொன்னேன்.
“அனுமதி வழங்கவில்லை என்றால், நாளை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் மகளிரைத் திரட்டி எல்லா இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று அறிவித்தேன். அதுவும் நானே அந்தப் போராட்டத்திற்குச் செல்வேன்” என்று கூறினேன்.
இந்த விஷயத்தை நான் டெலிபோனில் பேசினேன். ஏனென்றால் அப்போதுதான் இந்த விஷயம் ‘டேப்’ ஆகி, இந்தச் செய்தி உடனடியாக ஆளுங்கட்சிக்கு செல்லும் என்பது தெரியும். அவ்வாறே சென்றது. உடனே அதற்கு அனுமதித்து, போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால், இவ்வளவு அநியாமான, சர்வாதிகார ஆட்சி இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கான நாள் வந்துவிட்டது. தை பிறக்கப் போகிறது, “தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று எல்லோரும் சொல்வது உண்டு.
அதேபோல் இந்த ஆண்டு, தை பிறக்க போகிறது; வழியும் பிறக்கப் போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள்தான் இருக்கிறது. நான்கு மாதங்களில் ஒரு மாற்றத்தைத் தமிழ்நாட்டில் உருவாக்குவதற்காகத் தான், மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கிராம சபை - வார்டு சபைக் கூட்டங்களைத் தமிழ்நாடு முழுதும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த மக்கள் வார்டு சபைக் கூட்டத்திற்கு நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறீர்கள். ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிகமாக வந்திருக்கிறீர்கள். ஆண்கள் உங்களைச் சுற்றி நின்று கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் தான் உங்களுக்குப் பாதுகாப்பாக இருந்து கொண்டிருக்கிறோம். உங்களுக்குப் பாதுகாப்பு நாங்கள் தான். அதேபோல எங்களுக்குப் பாதுகாப்பு நீங்கள்தான். நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை. நாங்கள் இல்லை என்றால் நீங்கள் இல்லை.
நான் இன்று அரசியலில் இவ்வாறு ஈடுபடுகிறேன் என்றால் என்னுடைய மனைவி எனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும், எனக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அதேபோல இங்கு இருக்கக்கூடிய எல்லா ஆண்களின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் நிச்சயமாக இருக்கிறார். அதனால் தான் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கட்சியாக தி.மு.க. இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி தி.மு.க.
அதனால் தான் கலைஞர் அவர்கள் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தபோதும், ஐந்து முறை ஆட்சியில் இருந்த போதும் பெண்களுக்கெனச் சிந்தித்துச் சிந்தித்து பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். 1929-ல் தந்தை பெரியார் அவர்கள் செங்கல்பட்டில் ஒரு சீர்திருத்த மாநாட்டை நடத்தினார்கள். அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் பல தீர்மானங்களைப் போட்டார்கள். முக்கியமாக அதில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தரவேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை அவர் நிறைவேற்றினார்.
அதன்பின் 60 ஆண்டுகள் கழித்து கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தர வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றினார். ஆரம்பப் பள்ளிக் கூடங்களில் கட்டாயமாகப் பெண்களைத் தான் ஆசிரியராக நியமிக்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளில் 33% இட ஒதிக்கீடு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வுத் திட்டம், ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த பெண்ணிற்கு திருமணம் என்றால், அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்யும் திருமண உதவி திட்டம் – இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட திட்டம் - எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார் தலைவர் கலைஞர்.
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக மகளிர் சுய உதவிக்குழு, 1989-இல் தலைவர் கலைஞர் தான் முதன் முதலில் தருமபுரியில் தொடங்கி வைத்தார். அந்தத் திட்டம் இன்றைக்கு எங்கு இருக்கிறது என்று தெரியாத அளவில் இருக்கிறது. அதனால் எந்த நன்மையும் இல்லை. பெண்கள் சுயமாகச் சிந்திக்க வேண்டும், அவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும், யாருடைய தயவையும் எதிர்பார்க்கக்கூடாது, அவர்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகக் கொண்டு வந்ததுதான் அந்தத் திட்டம்.
தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, அவர்களுக்கெல்லாம் சுழல்நிதி, மானியம், வங்கிக் கடன் எல்லாம் கொடுத்தார்கள். நான்தான் அந்தத் துறை அமைச்சராக இருந்தேன். அதில் எனக்கு ஒரு பெருமை.
நான் துணை முதலமைச்சராகவும் - உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த நேரத்தில், சுழல்நிதி, மானியம், வங்கிக் கடனை நானே நேரடியாகச் சென்று கொடுத்திருக்கிறேன். யாராக இருந்தாலும் வரிசையாக வரச்சொல்லி, 5,000 பேராக இருந்தாலும் 4 மணி நேரம், 5 மணி நேரம் நின்று கொண்டே கொடுத்திருக்கிறேன். தாய்மார்கள் சிலர் கால்கள் வலிக்கவில்லையா எனக் கேட்கும்போது, உதவிகளை வாங்கும் போது உங்கள் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியைப் பார்த்தால், அந்த வலி பறந்து போய்விடுகிறது என்று சொல்வேன்.
அந்த அளவிற்கு அந்தத் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தோம். அப்படிப்பட்ட ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக்குவதற்காகத்தான் நீங்களெல்லாம் உறுதி ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
தி.மு.க. தான் வரப்போகிறது என்று நாங்கள் நம்புவதை விட நீங்கள்தான் அதிகமான நம்பிக்கையோடு இருக்கிறீர்கள். இல்லையென்றால் இவ்வளவு பேர் வருவீர்களா? இந்த வெயிலைக் கூடப் பொருட்படுத்தாமல் இங்கு வந்து உட்கார்ந்து இருப்பீர்களா? அந்த நம்பிக்கையுடன் இங்கு வந்திருக்கிறீர்கள். இப்போது இந்தப் பகுதியில் உள்ள பிரச்சினைகளை நீங்கள் கூறலாம். நேரம் கருதி பத்துப் பேர் சுருக்கமாக இந்தப் பகுதி பிரச்சினைகளைக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
மக்கள் வார்டு சபைக் கூட்டத்தை நிறைவு செய்து கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
வேலைவாய்ப்பு, சிஏஏ, என்ஆர்சி உள்ளிட்ட பல பிரச்சினைகள் பற்றி இங்கே பேசினார்கள். மத்தியில் இருக்கக்கூடிய பா.ஜ.க அரசு பற்றி உங்களுக்கு தெரியும். மோடி அவர்கள் முதல் முறை பிரதமராக வரும்போது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவேன் என்று சொன்னார்.
அதுமட்டுமில்லாமல் வெளி நாட்டில் இருக்கக்கூடிய கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டுவந்து, இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்று அறிவித்தார். 5 ஆண்டு ஆட்சி முடிந்து, இப்போது அடுத்த 2 ஆண்டு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 7 ஆண்டுகால ஆட்சியில், இதுவரைக்கும் யாருக்காவது வங்கியில் 15 லட்சம் போட்டிருக்கிறார்களா? 10 லட்சம் வேண்டாம், 15,000 ரூபாய், 15 ரூபாய், 15 பைசாவாவது போட்டிருக்கிறார்களா? இதுதான் மோடியின் லட்சணம்.
அதேபோல வேலைவாய்ப்பும் யாருக்கு கொடுக்கப்படவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படித்து முடித்துவிட்டு பதிந்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். அப்பொழுது வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்று அறிவித்தார்கள். இப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 2 - ஆவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். ஆனால் யாருக்கும் வேலை கொடுக்கப்படவில்லை.
நாம் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய இந்த மக்கள் கிராம/வார்டு சபைக் கூட்டத்தை பொருத்தவரைக்கும், 20,000க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. தமிழகம் முழுவதும் நடைபெறக்கூடிய கிராமசபை கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகை. அதேபோல இணையம் வழியாகவும் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி வருகிறார்கள்.
மக்கள் கிராம சபைக் கூட்டங்களின் வழியாக 80 லட்சம் பேரும், இணைய வழியாக 20 லட்சம் பேரும் இதில் பதிவு செய்திருக்கிறார்கள். அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை, இதுவரைக்கும் 1 கோடியைத் தாண்டியிருக்கிறது. அந்த அளவிற்குத் தமிழ்நாட்டு மக்கள் இந்த ஆட்சியை நிராகரிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
இந்த இராயபுரத்தில் இருக்கும் எம்.எல்.ஏ. யார் என்று உங்களுக்கு தெரியும். மீன் வளத்துறை அமைச்சராக இருக்கக் கூடிய, இடையில் சபாநாயகராகவும் இருந்தார்.
அமைச்சராக இருந்த அவரை, அந்தப் பதவியிலிருந்து ஜெயலலிதா தூக்கினார். ஏன் தூக்கினார் என்றால் அவருடைய வண்டவாளத்தைப் ஜெயலலிதா புரிந்து கொண்டார்.
அதனால் அவரை ஓரங்கட்ட வேண்டும் என்று சொல்லி அமைச்சர் பதவியிலிருந்து சபாநாயகர் பதவிக்கு மாற்றினார்கள். அப்படிப்பட்டவர் தான் இன்று மீன் வளத்துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் அவர்கள்.
அதுமட்டுமில்லாமல் எப்போதும் அவரை “முந்திரிக் கொட்டை, முந்திரிக் கொட்டை” என்று சொல்வார்கள். எதற்கு அவ்வாறு சொல்கிறார்கள் என்றால் வேறு யாராவது பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் அந்த அமைச்சர் பதில் சொல்வதற்கு முன்னால் இவர் முந்திக் கொண்டு சொல்லிவிடுவார். அதனால் அவரை அவ்வாறு சொல்வார்கள். யாரைக்கேட்டாலும் அவசரப்பட்டு முந்திக் கொண்டு வந்து பதில் சொல்லும் இவர், தனது தொகுதிப் பணிகளைச் செய்வதிலும் அந்த அவசரத்தைக் காட்ட வேண்டும் அல்லவா?
மீனவர்கள் கடலுக்கு சென்று, உயிரைப் பணயம் வைத்து, இந்தத் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக வாக்கி டாக்கி வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
அதில் பல முறைகேடுகள் நடந்து இருக்கிறது. கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறார் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் அவர்கள்.
இதை இங்கு மட்டும் வந்து சொல்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். 15 நாட்களுக்கு முன்னால், ஆளுநரிடத்தில் நாங்கள் புகார் மனு கொடுத்திருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி முதல் பல்வேறு அமைச்சர்கள் மீது புகார் மனு கொடுத்திருக்கிறோம். யார் யார் எவ்வளவு கோடி ரூபாய் கொள்ளை அடித்து இருக்கிறார்கள் என்று அதில் விவரங்கள் இடம் பெற்று இருக்கின்றன.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கிறது. இதை தி.மு.க. கண்டுபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதற்குப் பிறகு, சி.பி.சி.ஐ.டி. வழக்கை விசாரிக்க வேண்டும் என்று பதிவு செய்தார்கள். இதுவரைக்கும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர உண்மை நிலவரம் வெளிவரவில்லை.
4 மாதங்களில் தி.மு.க. ஆட்சிக்கு வரப்போகிறது. வந்தவுடன் அதனைக் கண்டுபிடித்து, அதற்குரிய நடவடிக்கையை நிச்சயமாக எடுப்போம்.
அடுத்தது வணிகப் பெருமக்கள் இந்தப் பகுதியில் அதிகமாக இருக்கிறார்கள். இந்த ஜி.எஸ்.டி.யால் எவ்வளவு கஷ்டங்களை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நாம் தான் அந்த ஜி.எஸ்.டி. வரி செலுத்துகிறோம். ஆனால் அந்த ஜி.எஸ்.டி. தொகையை வாங்கும் மத்திய அரசு, மாநில அரசிற்குக் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்.
இதுவரைக்கும் வழங்கி இருக்கிறதா என்றால், இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர் ஜெயக்குமார் ஒவ்வொரு முறையும் டெல்லி நோக்கி நமக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி.யை வாங்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். ஆனால் இதுவரைக்கும் மத்திய அரசு வழங்கவில்லை.
இங்கு ஒரு சகோதரி பேசும் போது, 2004-ம் ஆண்டு சுனாமிக்கு முன்பு மீன்பிடி துறைமுகப் பகுதியில் ஒரு பெரிய விளையாட்டு மைதானம் இருந்ததையும், சுனாமிக்குப் பிறகு அந்த மைதானம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டதால், மக்கள் அதைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதை எதிர்த்து என்றைக்காவது இந்தத் தொகுதியின் அமைச்சர் குரல் கொடுத்திருக்கிறாரா? இல்லை.
இராயபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கான நடவடிக்ககைகளைக் கூட இதுவரைக்கும் அவர் எடுக்கவில்லை. அவர் கிட்டத்தட்ட பல ஆண்டு காலமாக அமைச்சராக மட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினராக இங்கு தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த பகுதியில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா? ஏதாவது பாலம் கட்டியிருக்கிறாரா? தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் இங்கு இருக்கும் பாலங்கள் கட்டப்பட்டன என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
தமிழ்நாட்டில் பாலங்கள் பல கட்டி இருந்தாலும், நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்து போது, மாநகராட்சியின் சார்பில் 9 மேம்பாலங்கள் கட்டிய பெருமை எனக்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இங்கு ஒரு மேம்பாலத்தை கூட கட்டுவதற்கான யோக்கியதை அமைச்சருக்கு இல்லை. ஒரு வருடத்தில் போக்குவரத்து பிரச்சினைக்கு நான் தீர்வு காண்பேன் என்று தேர்தல் நேரத்தில் அவர் சொன்னார். ஆனால் இதுவரை தீர்வு காணப்படவில்லை. போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படவில்லை.
மீன் வளம் உள்ள தொகுதி இது. இந்தத் தொகுதியைப் பொறுத்தவரைக்கும் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். இந்த மீன் வணிகத்தை வளப்படுத்துவதற்காக என்ன செய்திருக்கிறார் என்ற கேள்விதான் எனக்கு கேட்க தோன்றுகிறது? மீன்வளப் பல்கலைக்கழகம், மீன்வளர்ப்புப் பூங்கா, ஆழ்கடல் மீன் பிடிப் பயிற்சிக் கப்பல், படகுகள் நிறுத்துவதற்குத் தளம், மழைநீர் சேமிப்புக் கட்டடம் இவற்றில் எதையும் இதுவரைக்கும் செய்து தரவில்லை என்று இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல எம்.சி. சாலை என்பது பெருமளவு போக்குவரத்து உள்ள பகுதி. இங்கு அடுக்குமாடி பார்க்கிங் வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் அவர் செய்து கொடுக்கவில்லை. அதற்குரிய முயற்சியிலும் ஈடுபடவில்லை. அதேபோல இராயபுரத்தில் எதாவது கல்லூரி, பள்ளி, கலையரங்கம், கட்டியிருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை.
மீன்பிடி துறைமுகத்தை காசிமேட்டில் இருந்து திருவெற்றியூருக்கு மாற்றுவதற்கு தமிழக அரசு முன்மொழிந்து இருக்கிறது. இதில் காசிமேட்டில் உள்ள மீன் வளர்ப்பு தொழிலாளர்களை பாதிக்கும் என்று இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்களெல்லாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
காசிமேடு மீன்பிடி துறைமுகம், சென்னை மீன்பிடித் துறைமுகத்தின் கீழ் வருகிறது. இது மத்திய அரசின் அமைப்பாகும். மீன்பிடி துறைமுகத்தை மாநில அரசின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.
துறைமுகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மத்திய அரசின் அனுமதியின்றி எந்த ஒரு பராமரிப்புப் பணிகளையும் அரசு மேற்கொள்ள முடியாது. இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சீன மோட்டார் படகுகளால் சிறு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஜெயக்குமார் என்ன செய்திருக்கிறார் என்ற கேள்வியைத்தான் உங்கள் மூலமாக கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு, காசிமேடு மீன்பிடித் துறைமுகப் பகுதியில் ஒரு புதிய மீன்பிடி ஏல மண்டபத்தை கட்டியது. அதற்கு அந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
இந்த ஏல மண்டபம் இப்பொழுது சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற ஜெயக்குமார் அவர்கள் இதுவரைக்கும் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஏன் என்றால் அவர் ஜெயக்குமாருக்கு வேண்டியவராக இருக்கிறார். அவருக்கும் ஜெயக்குமாருக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி தான் நான் கேட்கிறேன்.
பாரம்பரிய மீனவர்களுக்கு படகு வாங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் வந்திருக்கிறது. சொந்தக் கட்சிக்காரர்களைத் தவிர மற்றவர்களால் படகுகள் வாங்கப்பட முடியவில்லை என்பதனை நான் ஜெயக்குமாருக்கு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
ஐக்கிய பஞ்சாயத்து சபை என்பது 18 உள்ளூர் மீனவர்களின் கிராமங்களை பஞ்சாயத்து சங்கமாகும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதில் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் 2011 முதல் அந்தத் தேர்தல் நடத்தப்படவில்லை.
அமைச்சர்களால் நியமிக்கப்பட்டவர்கள் தான் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் தான் ஜெயக்குமார் அவர்கள், இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல், மீன்வளத்துறை அமைச்சராகவும் இருந்து கொண்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல், மீனவ சமூகத்தை பற்றி கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்காமல், தன்னுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்காகவும், தன்னுடைய அரசியல் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறாரே தவிர மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.
இவ்வாறான அக்கிரம ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் இதுதான் இந்த ஆட்சியின் குறிக்கோளாக, கொள்கையாக இருந்து கொண்டிருக்கிறது.
எனவே இந்த ஆட்சியை மாற்றுவதற்கு நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும், தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அ.தி.மு.க. ஆட்சியை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானத்தை இப்பொழுது நிறைவேற்றுகிறோம். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!