Tamilnadu
“பொங்கலுக்கு பதில் இளவம்பஞ்சு பொங்குவது போல செட்டப்” : சினிமா பாணியில் பொங்கல் விழா நடத்திய பா.ஜ.க !
தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற நினைக்கும் பா.ஜ.க., பல்வேறு நாடகங்களை அடிக்கடி அரங்கேற்றி வருகிறது. குறிப்பாக, கடவுளின் பெயரில் யாத்திரை நடத்துவதாக கூறி, கூட்டத்தைக் கூட்ட சினிமா டான்ஸர்களை குத்தாட்டம் போட வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது வந்தது.
பா.ஜ.கவின் இதுபோன்ற ஏமாற்று வேலைகளை தமிழக மக்கள் அடையாளம் கண்ட நிலையில், விறகில்லா அடுப்பு, பஞ்சுப் பொங்கல் என சினிமா சூட்டிங் பாணியில் நடத்திய பா.ஜ.கவினரின் பொங்கல் விழாவை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மதுரை தெப்பகுளம் பகுதியில், பா.ஜ.க-வினர் சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழா பா.ஜ.க செய்தி தொடர்பாளர் குஷ்பு தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட பெண்கள் பலர் விழா நடக்கும் இடத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதற்கு காரணம், திரைப்பட நடிகை குஷ்பு கலந்துக் கொள்வதால், சினிமா சூட்டிங் பாணியில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக என அங்கிருந்த பெண்கள் சிலர் தங்களுக்குள்ளாகவே பேசிவிட்டு விழா நடக்கும் இடத்தைச் சுற்றி பார்த்தனர். அப்போது, குஷ்பு கிண்டுவதற்கு மட்டும் வெண்கலப் பானையில் பொங்கல் அரிசி, வெல்லம் இட்டு, எரியும் அடுப்புடன் தயாராக இருந்தது. அந்த ஒருபானையில் மட்டும் பொங்கல் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மீதமுள்ள பானைகளில் வர்ணம் பூசப்பட்டு, விறகில்லா அடுப்பு மற்றும் கரும்புகள் சூழ வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த பெண்கள் முதலில் பொங்கலுக்கு பதிலாக வெறுமனே இளவம்பஞ்சு பொங்குவது போல செட்டப் செய்து வைக்கப்பட்டிருந்த பானைக்கு அருகில் சென்று, நிற்கவே கூச்சமடைந்தனர்.
இதனையடுத்து அங்கிருந்த செய்தியாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததைப் பார்த்த பெண்கள், வேறு வழியின்றி, பொங்கல் பானையில் வைக்கப்பட்ட பஞ்சை கிண்டுவது போல போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். அதுமட்டுமல்லாது, பொங்கல் விழாவிற்கு பாரம்பரிய உணர்வைக் கொடுப்பதற்காக அம்மி மற்றும் உரல் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.
அந்த அம்மியில் மஞ்சள் பொடி பாக்கெட்டில் உள்ள மஞ்சள் பொடியை கொட்டி அதனை தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைத்ததும், ஒன்றுமே இல்லாத உரலில், உலக்கையை போட்டு இடித்த நாடகமும் கூடுதல் நகைச்சுவையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒரு நாடகத்துக்காகவாவது குறைந்தபட்சம் அடுப்புகளுக்கு விறகுகள் வைத்திருக்கலாம் என்றும், விறகில்லா அடுப்பில் பஞ்சுதான் பொங்கும் என்றும் நகைப்புடன் கூறிச் சென்றனர் விழாவுக்கு அழைத்து வரப்பட்ட பெண்கள்.
பா.ஜ.க வழக்கம் போல் தங்களின் ஏற்பாடுகளை சினிமா சூட்டிங் போல நடத்தியது அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பலரும் பா.ஜ.கவின் பொங்கல் விழாவை போலி பொங்கல் விழா என விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !