Tamilnadu
“திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு எப்படி அனுமதி வழங்க முடியும்?” - அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதியளித்து கடந்த அக்டோபர் 31ம் தேதி தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தார்.
தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதியளித்து கடந்த 4ம் தேதி தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்து, தனி மனித விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தொடரும்படி உத்தரவிடக் கோரி சென்னை, கோபாலபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து 2020 டிசம்பர் 31ம் தேதி பிறப்பித்த உத்தரவில், பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாகவும், காணும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமூக, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு, மதம் மற்றும் கல்வி சார்ந்த அனைத்து வகையான கூட்டங்களிலும், 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அதிகபட்சமாக 200 பேருக்கு மேல் அனுமதிக்க கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளில் நூறு சதவீத இடங்களையும் அனுமதித்து பிறப்பித்த உத்தரவு, சட்டவிரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் தடுப்பூசிகள் போடும் பணிகள் இன்னும் துவங்காத நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு எப்படி அனுமதி வழங்கமுடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 100 சதவீத இருக்கைகளுக்கு தற்போது அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்தனர்.
மேலும் 50% இருக்கைகள் அனுமதிக்கப்படுகிற தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து வரும் வரை எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து மதுரை கிளையில் விசாரிக்கப்படும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!