Tamilnadu

கொரோனா அச்சுறுத்தலை கண்டுகொள்ளாமல் அ.தி.மு.க அரசு எடுத்த அவசர முடிவு - தலையில் குட்டிய மத்திய அரசு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் தற்போது வரை நீடித்து வருகிறது. பொது நிகழ்ச்சிகள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் ஆகியவை பல்வேறு கட்டுப்பாடுகளுக்குட்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

50 % இருக்கைகளை மட்டுமே நிரப்பி திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஜனவரி 4-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக அரசு உத்தரவுக்கு பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது ஆபத்தானது என தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கவுர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளை நிரப்பிக்கொள்ள அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தற்போது 100% இருக்கைகளுக்கு அனுமதி என்பது மத்திய அரசின் அறிவுறுத்தலை மீறிய செயலாகும்.

எனவே மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி புதிய உத்தரவை பிறப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் 100% இருக்கை அனுமதியை மறுபரிசீலனை செய்யுமாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்புவது ஆபத்தானது” - மீண்டும் எச்சரிக்கும் பிரதீப் கவுர்!