Tamilnadu

“6 ஆண்டுகளில் 561 யானைகள் உயிரிழப்பு; கண்டுகொள்ளாத அ.தி.மு.க அரசு” : கொந்தளிக்கும் வனவிலங்கு ஆர்வலர்கள்!

கம்பீரத் தோற்றத்துடன் கூட்டமாக வாழக்கூடிய யானைகள் காடுகளின் பாதுகாவலன் என போற்றப்படுகிறது. நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் தனது வலசுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி நடந்து சென்று ஒரு பகுதியில் இருக்கும் விதையை மற்ற பகுதிக்கு பரப்புவதில் மிகப்பெரிய பங்கு யானைகளுக்கு உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் தேசிய அளவில் நடந்த யானைகள் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 27 ஆயிரத்து 212 யானைகள் இருந்தன. அவற்றில் 10% யானைகள், அதாவது 2,761 யானைகள் தமிழகத்தில் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்தது. தமிழகத்தில் 4 புலிகள் காப்பகங்கள் ஒன்பது வனக்கோட்டங்கள், 4 வன உயிரின சரணாலயங்களில் யானைகள் பரவலாக வாழ்கின்றன.

யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துகள், விவசாய பயிர்களை காக்க விவசாயிகள் கையாளும் தவறான உத்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

அதேபோல் காட்டு யானைகள் தாக்கி உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் இதற்கு இணையாக உயர்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் காட்டு யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பது குறைந்துள்ளது.

ஆனால், யானைகள் உயிரிழப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவை, சத்தியமங்கலம், நீலகிரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் உள்ள வனப்பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் யானைகள் உயிரிழப்பு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

இது தொடர்பாக ஆய்வு செய்ய முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்புக் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. ஆனால் அவர்கள் இதுவரை எந்த ஆய்வையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 561 யானைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வன உயிரின ஆர்வலர் ஆண்டனி ரூபின் என்பவர், தமிழகத்தில் யானைகள் உயிரிழப்பு தொடர்பாக வனத்துறை பதிலளிக்கும் படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.

அதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 61 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், 2016ம் ஆண்டில், 98 யானைகளும், 2017ம் ஆண்டில் 125 யானைகளும், 2018ம் ஆண்டில் 84 யானைகளும், 2019ம் ஆண்டில் 108 யானைகளும் மற்றும் 2020ம் ஆண்டு செம்ப்டம்பர் வரை 85 யானைகள் உயிரிழந்துள்ளனர். இதனால் கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 561 யானைகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த 6 ஆண்டுகளில் அதிகபட்சமாக ஈரோடு மண்டலத்தில் 167 யானைகளும், கோவை மண்டலத்தில் 134 யானைகளும் தர்மபுரி மண்டலத்தில் 89 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனத்துறை குறிப்பிட்டுள்ளது. இதில், 2020ம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 7 யானைகள் சட்டவிரோத மின்வேலிகளில் சிக்கி உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.

யானைகள் ஒவ்வொரு முறையும் உயிரிழந்த பிறகு அதுதொடர்பாக முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் தற்போதுவரை உயிரிழப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய வகையில் எந்த அறிக்கையும் வெளியிடுவதில்லை.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிகமுக்கிய பங்காற்றும் யானைகளின் மரணம் குறித்து இந்த அரசாங்கத்திற்கு கவலை இல்லையா? மேலும் வனத்துறை அமைச்சராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் இதுபற்றி எதுவும் பேசாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்துவதாக தம்பட்டம் அடிக்கும் அ.தி.மு.க அரசு, யானைகளை பாதுகாப்பதில் எந்தவித அக்கறையும் காட்டவில்லை எனவும் என வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: “யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றவேண்டும்” : தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!