Tamilnadu

ரூ.56,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை ரூ.720 கோடிக்கு விற்கத் துடிக்கும் மோடி அரசு - தனியார்மயமாகும் BEML!

பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்பரேட்களுக்கு ஆதரவான டெண்டர், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க தீவிரமாக முயற்சிகள் என பல்வேறு செயல்களை முனைப்புடன் செய்து வருகிறது.

குறிப்பாக சேலம் உருக்காலை, விமான நிலையங்கள், ரயில் பெட்டித் தொழிற்சாலைகள், பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் ரயில்வே துறை என அனைத்து பொதுத்துறைகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, மக்களுக்குச் சேவை செய்யப்போவதாக பா.ஜ.க அரசு தம்பட்டம் அடித்து வருகிறது.

இந்நிலையில், சுரங்கம், கட்டுமானத் துறைகள் மற்றும் மெட்ரோ ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் பி.இ.எம்.எல் எனப்படும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்க மோடி அரசு தயாராகியுள்ளது.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு 1964இல் நிறுவப்பட்ட இந்நிறுனம் கேரளா கஞ்சிகோடு பகுதியில், 2010ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை லாபம் மட்டுமே ஈட்டியுள்ளது.

மேலும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியால் பெங்களூரு, மைசூரு, கோலார், கஞ்சிகோடு ஆகிய நான்கு பகுதியில் உற்பத்தி கூடாரங்கள் மட்டும் 4,160 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. சமீபத்தில்கூட பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில், போட்டி டெண்டர் மூலம் ரூ.5,000 கோடி மதிப்புள்ள கட்டுமான ஆர்டர்களை பி.இ.எம்.எல் வென்றது.

இப்படி லாபம் ஈட்டும் இந்த பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு மோடி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், தனது 54.03 சதவிகித பங்குகளில் 26 சதவிகிதத்தை விற்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், பொதுத்துறை நிறுவனமான மினி நவரத்னா நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தை ஏற்க விரும்புவோர் மார்ச் 1ம் தேதிக்குள் அணுகுமாறு மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதில் மற்றொரு கொடுமையாக, ரூ.56,000 கோடி மதிப்பிலான இந்த பொதுத்துறை நிறுவனத்தை வெறும் ரூ.720 கோடிக்கு விற்கப்போகிறது மோடி அரசு. இது ஊழியர்கள் மற்றும் கேரள அரசு மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே நாட்டின் பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கிவரும் மோடி அரசு தற்போது பி.இ.எம்.எல் தனியார் மயமாக்கப்பட்டதால் அதில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து பி.இ.எம்.எல் நிறுவத்தின் ஊழியர் ஒருவர் கூறுகையில், “மக்கள் நலன் கருதி, 2010-ல் இந்த நிறுவனத்தை அமைக்க 375 ஏக்கர் நிலம் கேரள அரசால் இலவசமாக வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது, நிலம் உட்பட அனைத்தையும் கார்ப்பரேட் நலன் கருதி தனியாரிடம் கொடுக்க இந்த அரசு தயாராகி வருகிறது. அதுமட்டுமல்லாது, பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனம் தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உண்டாகக்கூடும்.

இந்த நிறுவனத்தை கையகப்படுத்த ரிலையன்ஸ், வேதாந்தா மற்றும் கல்யாணி குழுமங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் காட்டி வருகின்றன. மோடி அரசு தொழிலாளர்கள் நலன் கருதி இந்த நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்ககூடாது” என வலியுறுத்தியுள்ளார்.

Also Read: தமிழ்நாட்டில் தமிழாய்வு நிறுவனம் முடக்கம் : தமிழ் மொழி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் எடப்பாடி அரசு!