Tamilnadu
தமிழ்நாட்டில் தமிழாய்வு நிறுவனம் முடக்கம் : தமிழ் மொழி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் எடப்பாடி அரசு!
பா.ஜ.க மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அடியெடுத்து வைத்ததில் இருந்து இந்துத்துவா கருத்துகளை தீவிரமாக மக்கள் மத்தியில் புகுத்த முயற்சித்து வருகிறது. ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’, ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கடை’, ‘ஒரே நாடு; ஒரே கல்விக் கொள்கை’ போன்ற திட்டங்கள் இந்துத்துவா கொள்கையை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்படுகின்றன.
மேலும், நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சியை தொடர்ந்து பா.ஜ.க செய்துவருவதாக பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிப்பதும், தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தை வழங்காமல் புறக்கணிப்பது போன்ற நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் நடக்கும் தேர்வு மற்றும் திறனாய்வு போட்டிகள் உள்ளிட்டவற்றில் தமிழ் மொழியை தவிர்த்துவிட்டு இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. அதுமட்டுமின்றி, சமஸ்கிருத மொழி மேம்பாட்டிற்காக கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 643.84 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இந்தத் தொகை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரிய மொழிகளுக்கு செலவிட்ட தொகையைவிட 29 மடங்கு அதிகம் எனத் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆய்வு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிதி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி வளர்ச்சிக்காக செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் கடந்த 2017 - 2018ம் ஆண்டில் 10.59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிதி, 2018 -2019-ல் 4.65 கோடியாகவும், 2019- 2020ல் வெறும் 7.7 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிறமொழிகளுக்கு வழங்கப்பட்ட நிதியையும் பா.ஜ.க அரசு குறைத்துள்ளது.
அதுமட்டுமல்லாது, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தைச் செயல்பட விடாமல் முடக்கி - ஒரு நிறுவனமாக இருக்கும் மொழியின் அந்தஸ்தை, ஏதோ ஒரு பல்கலைக்கழக “துறை” என்ற அளவில் சுருக்கும் நோக்கில் மைசூரில் உள்ள “பிபிவி” பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முடிவினை பா.ஜ.க அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவிக்காமல் வாய்மூடி அமைதி காக்கிறது.
இந்நிலையில், டெல்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்பும் வகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின் பேரில் தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அகாடமியின் தலைவராக டெல்லி தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அரசின் இந்த அறிவிப்பக்கு தமிழக அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் "டெல்லியில் தமிழ் அகாடமி" அமைத்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரின் இந்தப் பதிவு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ் ஆர்வலர் ஒருவர்கள் கூறுகையில், “ஒருபக்கம் டெல்லியில் அமைந்த தமிழ் அகாடமிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு மறுபக்கம் தமிழ்நாட்டில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை முடக்கி இரட்டைவேடம் போடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
மத்திய அரசு தமிழ் மொழி மீது தொடுக்கும் தாக்குதலைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். தமிழ் மொழி வளர்ச்சிக்காக அ.தி.மு.க அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த உதவிகள் என்ன? திட்டம் என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!