Tamilnadu
“கொடுத்த வாக்குறுதி என்னாச்சு ?” : போராடிய ஆசிரியர் - அரசு ஊழியர்களை பழிவாங்கும் அ.தி.மு.க அரசு!
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், வேறுசில நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் அசிரியர் - அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கோரிக்கையை அடுத்து பொதுமக்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள். ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டும் போதே, தங்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கக்கூடாது என வலியுறுத்தினார்கள்.
அப்போது ஆளும் அ.தி.மு.க அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கமாட்டோம் எனக் வாக்குறுதி அளித்திவிட்டு, போராட்டம் முடிவுக்கு வந்து ஏறத்தாழ 23 மாதங்கள் கடந்த நிலையில், போராடிய அசிரியர் - அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் தற்போது எடப்பாடி அரசு இறங்கியுள்ளது.
குறிப்பாக, 5,868 - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் மீது போராட்டக் காலத்தில் போடப்பட்ட குற்றக் குறிப்பாணைகள் (17பி) 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிமாற்றல் உத்தரவு போன்றவை இன்றும் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆசிரியர் - அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, குற்றக் குறிப்பாணை (17பி) நிலுவையில் உள்ளதால் ஊழியர்கள் பதவி உயர்வு, வருடாந்திர ஊதிய உயர்வு, பணி ஓய்வுக்கு பின்னர் கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பயன்கள் எதுவும் கிடைக்கவில்லை; இதனால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பெரும் இன்னல்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர் - அரசு ஊழியர்கள்,முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பிய பிறகும் தமிழக அரசு அவர்களை பழிவாங்குவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தி.மு.க சிபிஐ(எம்), விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள்ஆசிரியர் - அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனே கைவிட்டு, அவர்கள் மீது புனையப்பட்ட குற்றக் குறிப்பாணைகளை உடனடியாக ரத்து செய்வதுடன், அவர்களது நியாயமான கோரிக்கையான பழைய ஓய்வூதியதிட்டத்தினை அமல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!