Tamilnadu

”திராவிட கருத்தியல் பேசும் பக்கங்களை முடக்கும் ஃபேஸ்புக்” - தி.மு.க தலைவருக்கு ‘We Dravidians’ கடிதம்!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சங்பரிவார அணுகுமுறை குறித்தும், பா.ஜ.கவிற்கு எதிரான கருத்தியல் பேசும் ஃபேஸ்புக் பக்கங்கள் முடக்கப்படுவது குறித்தும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ‘வீ திராவிடியன்ஸ்’ முகநூல் ஏடு சார்பாக கடிதம் எழுதியுள்ளனர்.

‘வீ திராவிடியன்ஸ்’ குழுமத்தின் கதிர் ஆர்.எஸ் எழுதியுள்ள இக்கடிதத்தில், "நாங்கள் வீ திராவிடியன்ஸ் என்ற ஆங்கில முகநூல் ஏட்டை கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இவ்வேட்டின் தமிழ் தெலுகு கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய பதிப்புகள் தங்களை நேரில் சந்தித்து தங்கள் வாழ்த்துகளைப் பெற்று கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வேடு மேலும் வளர்ந்து தற்போது மராட்டி பெங்காலியையும் சேர்த்து மொத்தம் 8 மொழிகளில் செயல் படுகிறது. திராவிட கருத்தியலைப் பரப்பும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு எந்த லாப நோக்கமுமின்றி இயக்கப் பற்றுள்ள பல மாநில இளைஞர்களின் உதவியுடன் இந்தியாவில் திராவிட கருத்தியலுக்காக தேசிய அளவில் செயல்படும் ஒரே ஏடாக திகழ்கிறது வீ திராவிடியன்ஸ் ஏடு.

65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்களுடன், இவ்வேடு மாதத்திற்கு சுமார் 3 மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடைகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க கட்சிக்கு எதிராக தீவிரமாக இணைய பிராச்சாரம் செய்த ஏடுகளில் வீதிராவிடன்ஸ் ஏடும் ஒன்று. அப்போது முதல் இந்த ஏட்டுக்கு பல வித நேரடி மறைமுக மிரட்டல்கள் வந்தவண்ணமிருக்கின்றன.

முகநூல் நிர்வாகம் இந்த ஏட்டை காரணமின்றி வெறுப்பு பேச்சு ஆதாரமற்ற தகவல் போன்ற குற்றச்சாட்டுகளைச் சொல்லி சிலமாதங்கள் முடக்கி வைத்தது. அவற்றிலிருந்து மீண்டு கடந்த பொது முடக்கத்தின் போது ஐம்பதுக்கும் மேற்பட்ட பல திராவிட ஆளுமைகளின் ஆங்கில உரைகள் நேர்முகங்களை அண்ணா பெரியார் பிறந்தநாளின் போது நிகழ்த்தினோம். இவை பெரிய அளவில் மக்களைச் சென்று சேர்ந்தன. அதனால் தானோ என்னவோ, முகநூல் நிர்வாகம் கடந்த சிலமாதங்களாக அடிப்படை ஆதாரமின்றி இவ்வேட்டின் பதிவுகளை நீக்கி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி வந்த நிலையில் இப்போது இவ்வேட்டை நிரந்தரமாக முடக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் இவ்வேடு முழுவதுமாக முடக்கப்படலாம் என எங்கள் குழுவினரும் நண்பர்களும் கருதுகின்றனர். பல உண்மைச் செய்தியைக் கூட Fact Check செய்து பொய் செய்தி என நமது ஏட்டின் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள் முகநூல் நிர்வாகத்தினர். எங்கள் அட்மின்களின் தனிக்கணக்குகளை முடக்குகின்றனர். பல பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள், நாங்கள் பதிவிடும் திராவிடத் தலைவர்கள் பற்றிய பதிவுகளில் ஆபாசமாக பேசி வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி தரும் பல மொழி பேசும் இயக்க நண்பர்களின் ஐடிகள் முடக்கப்படுகின்றன. அல்லது அந்த கருத்து நீக்கப்படுகிறது. ஆனால் அதே நேரம் எதிரணியினரின் ஆபாச கருத்துக்கள் புகார் அளித்தாலும் நீக்கப்படுவதில்லை. இவை எல்லாவற்றுக்குமான ஆதாரங்களை நாம் திரட்டி வைத்திருக்கிறோம்.

இதன் மூலம் முகநூல் நிர்வாகம் முழுக்க முழுக்க பா.ஜ.கவின் கைப்பாவையாகச் செயல்படுவது உறுதியாகிறது. இது நம் நாட்டின் கருத்துரிமைக்கும் ஜனநாயகத் தன்மைக்கும் எதிரானது. நமது ஏடு இந்திய அளவில் திராவிட கருத்தியலுக்காக செயல்படும் மிகப்பெரிய ஏடு என்பதும் ஒரே ஏடு என்பதும் நெடுநாட்களாகவே சங்கப் பரிவாரத்தினரின் கண்களை உறுத்துகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கோடிக்கணக்கான வட இந்தியர்களுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சமூகநீதிக் கருத்துகளையும், சாதனைகளை கொண்டு சேர்த்து அவர்களிடையே நமது திராவிட கருத்தியலைப் பேசு பொருளாக்கியதில் வீ திராவிடியன்ஸ் ஏட்டின் பங்கு கணிசமானது என்பதை இங்கே பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகநூல் நிர்வாகம் அனுப்பியிருக்கும் அச்சுறுத்தல் நோட்டீஸ் இணைப்பில் இவ்வேடு முடக்கப்படுவதிலிருந்து தடுக்கவும் எங்களைப் போன்ற பல ஏடுகளின் மீது ஏவப்படும் இந்த கருத்துரிமைக்கு எதிரான இந்த தாக்குதலை முகநூல் நிர்வாகம் நிறுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டியும் தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: பஜ்ரங்தள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை - பா.ஜ.க ஆதரவு ஃபேஸ்புக் : அம்பலப்படுத்திய வால் ஸ்ட்ரீட் ஜர்னல்!