Tamilnadu

சரக்கு ஆட்டோவில் முதல்வரின் பிரச்சாரத்திற்கு சென்றவர்களின் வாகனம் விபத்து: ஒருவர் பலி; 28 பேர் படுகாயம்!

2021-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலின் பிரச்சாரத்தை நாமக்கல்லில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று வாக்குச் சேகரித்தார்.

இந்நிலையில் நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குளக்கரை திடலில் அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்திற்கு நாமக்கல் மட்டுமின்றி சேந்தமங்கலம், திருச்செங்கோடு, இராசிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த பொது கூட்டத்திற்கு திருமலைப்பட்டியை சேர்ந்த 28 பேர் கூட்டம் முடிந்து தாங்கள் வந்த சரக்கு ஆட்டோவில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். ஆட்டோவானது முதலைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோவில் சென்ற 28 பேரும் காரில் வந்த ஒருவர் என 29 பேர் காயமடைந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் அனைவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமலைபட்டியை சேர்ந்த பழனியம்மாள் (55) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “விவசாயிகளை வஞ்சித்து தனக்குத் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளகிறது எடப்பாடி அரசு” : சண்முகம் சாடல்!