Tamilnadu
“விவசாயிகளை வஞ்சித்து தனக்குத் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளகிறது எடப்பாடி அரசு” : சண்முகம் சாடல்!
காவல்துறையின் தடைகள், கெடுபிடிகளையும் மீறி, விவசாயிகள் விரோத ஆட்சிக்கு எதிராக, தஞ்சையில் மாநிலம் தழுவிய உழவர்கள் பேரணி நேற்றைய தினம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் விரோதச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.
மாநில அ.தி.மு.க அரசு மக்கள், விவசாயிகள் விரோதசட்டங்களை ஆதரிக்கக் கூடாது என வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தஞ்சாவூர் திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க விவசாய அணி உட்பட 10க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அனைத்து சங்கங்களைச் சேர்ந்த மாநில முக்கிய நிர்வாகிகள் மத்திய - மாநில அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதன்படி பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கபொதுச் செயலாளர் பெ. சண்முகம், “தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை (டிச.29) பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவதற்காகக் காவல் துறையிடம் முறையாக அனுமதி கோரி கடிதம் அளித்தோம்.
ஆனால், இழுத்தடிப்பு செய்து பொதுக்கூட்டத்துக்கு மட்டும் அனுமதி அளித்தனர். இப்பொதுக் கூட்டத்துக்கு வெளிமாவட்டங்களிலிருந்து யாரும் வரக்கூடாது எனக் கூறிவிட்டனர். இப்பொதுக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த பல மாவட்டங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் வீட்டுக் காவலில் வைத்துவிட்டனர். அதுமட்டுமல்லாது, கூட்டத்தைச் சீர்குலைப்பதற்காகத் தமிழக அரசும், காவல் துறையும் அடக்குமுறையை மேற்கொண்டு வருகின்றனர்.
வேளாண் சட்டங்களை ஆதரித்து ஆளுங்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்குள்ள உரிமை, அச்சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கும் இருக்கிறது. போராடுவது அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றமும் கூறியிருக்கிறது. இந்நிலையில், விவசாயிகள் பெருமளவில் கூடுவதை விடக்கூடாது என திட்டமிட்டு தமிழக அரசின் வழிகாட்டுதலுடன் காவல் துறைச் செயல்படுவது சட்ட விரோதமானது.
மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும். இல்லாவிட்டால் போராட்டம் நீடிக்கும். இதேபோல, தமிழ்நாட்டிலும் தொடர்ச்சியாகப் போராட்டம் நடைபெறும். போராட்டத்துக்குத் தடை விதித்தாலும், தடையை மீறி நடத்துவோம்.
இப்பிரச்சனை வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். பா.ஜ.கவுடன் அணி சேர்ந்துள்ள அ.தி.முக தனக்குத் தானே மண்ணைஅள்ளிப் போட்டுக் கொள்ளப் போகிறது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!