Tamilnadu

பொங்கல் பரிசு: மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் தொகை வழங்க அ.தி.மு.க அரசு மறுப்பு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன் அடிப்படையில் கடந்த 21ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, பொங்கல் பரிசு தொகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு, 25 சதவீத கூடுதலாக வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து விதமான மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்புராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த 2016ம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் வழங்கப்படும் தொகைகளில், 25 சதவீதம் கூடுதலாக மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2019ம் ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்ட போதும், 25 சதவீதம் கூடுதல் வழங்க கோரி தொடர்ந்த வழக்கில் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், ஆனால் பொங்கல் பரிசு என்பது திட்டமல்ல எனக் கூறி தங்கள் கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Also Read: அமைச்சர்கள் படம் போட்டு டோக்கன் வழங்க மக்கள் வரிப்பணம் என்ன அவர்கள் சொத்தா? - அதிமுகவை சாடிய துரைமுருகன்!

திட்டமில்லாமல் பரிசு தொகை வழங்க முடியாது என்பதால், பொங்கல் பரிசில் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவீத கூடுதல் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பொங்கல் பரிசு குடும்பத்துக்கு வழங்கப்படுகிறதே தவிர தனி நபர்களுக்கு அல்ல என்பதால், மாற்றுத் திறனாளிகள் சட்டப்பிரிவு இத்திட்டத்துக்கு பொருந்தாது என்றார்.

மேலும், மாற்று திறனாளிகளுக்கு 33 கோடி ரூபாய் உதவித்தொகையாக விநியோகிக்கப்படுகிறது என்றும், 455 கோடி ரூபாய் மதிப்பில் சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 5 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Also Read: பொங்கல் பரிசு டோக்கன் மூலம் சுய விளம்பரம் தேடும் அதிமுக - அவசர விசாரணை கோரி ஐகோர்ட்டில் திமுக மனு தாக்கல்