Tamilnadu
பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை; விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.. அரசுக்கு வைகோ வேண்டுகோள்
குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் என தமிழக அரசை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழகத்தில் அண்மைக்காலமாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவதை, அன்றாடம் பதிவு செய்யப்படுகின்ற போக்சோ வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது.
கொரோனா முடக்கத்தின் விளைவாக வருமானத்திற்கு வழி இல்லாத குடும்பங்களில், பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருக்கின்ற ஆண் பெண் குழந்தைகள், வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது. அடித்தட்டு ஏழை எளிய குடும்பங்களுக்கு, அரசு நிதி உதவிகள் போதுமான அளவு கிடைக்கவில்லை.
இலட்சக்கணக்கான நடுத்தர குடும்பங்கள், இப்போது வறுமைக் கோட்டுக்குக் கீழே சென்று விட்டன. இத்தகைய சூழலில், பெண் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த, குடும்பத்தினரே பின்னணியாக இருந்தார்கள் என்பதைப் படிக்ககின்ற வேளையில் கண்ணீர் துளிர்க்கின்றது.
நாட்டில் நிலவுகின்ற வறுமையின் கொடுமையை உணர முடிகின்றது. அயனாவரத்தில் வாய் பேச முடியாத சிறுமிக்குக் கொடுமை இழைத்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்கள். பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்; கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது. ஏற்கனவே, காவல் நிலையங்கள், கொலைக்களங்கள் ஆகி இருக்கின்றன. இந்த நிலையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகின்ற ஒரு சில காவலர்களால், காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகின்றது.
எனவே, குற்றம் இழைக்கின்ற காவலர்கள், பாலியல் தரகர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் அக்கறை கொண்டு, கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!