Tamilnadu
மாவட்ட நீதிபதி பணித் தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி: பா.ஜ.க குறிக்கோளை நிறைவேற்ற முயல்கிறதா தமிழக அரசு?
தமிழகத்தில் 32 மாவட்ட நீதிபதிகளை நேரடியாக தேர்வு செய்வதற்கான பணித்தேர்வு அறிவிப்பு கடந்த 2019 டிசம்பர் 12-ம் தேதி வெளியிடப்பட்டது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மாவட்ட நீதிபதி பணிக்கான தேர்வை எதிர்கொள்ள, குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக பணிபுரிந்திருக்கவேண்டும் எனத் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதத்தில் நடத்தப்படவிருந்த முதல்நிலைத் தேர்வுகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு கடந்த நவம்பர் 1ம் தேதி நடத்தப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றமும், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமும் இணைந்து நடத்திய இத்தேர்வில் சுமார் 2,500 பேர் பங்கேற்றனர்.
இந்நிலையில், மாவட்ட நீதிபதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 32 பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளில் காலிப்பணியிடங்களைப் பொறுத்தே ஒவ்வொரு நிலைகளிலும் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். முதல்நிலைத் தேர்வில் காலிப் பணியிடங்களை விட 15 மடங்கு எண்ணிக்கையிலானோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். அவர்களில் இருந்து காலியிடங்களை விட 3 மடங்கு பேர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
இவ்வாறான முறை மூலம் காலிப் பணியிடங்களுக்கு ஏற்றபடி தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க இயலும். ஆனால், மாவட்ட நீதிபதிகள் நியமனத்திற்கான முதல்நிலைத் தேர்வில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்து தேர்வுகள் நடத்தப்பட்டன.
200 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வில் பொதுப்பிரிவினர் 80 மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட்ட- மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 75 மதிப்பெண்கள், பட்டியலின- பழங்குடியினர் 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி எனக் குறிப்பிடப்பட்டதோடு, தவறான விடைகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால் தற்போது, வெகுசொற்ப எண்ணிக்கை கொண்டவர்களே தேர்ச்சி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 31 மாவட்ட நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட முதல்நிலைத்தேர்வில் இந்த முறை பின்பற்றப்பட்டதால் பங்கேற்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
அரசு செலவில் தேர்வு நடத்தப்பட்டும் ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படாததை அரசின் நிர்வாகத் தோல்வியாகவே கருத வேண்டியிருக்கிறது. தற்போது மீண்டும் அதேபோன்று தேர்வை நடத்தி, முடிவை வெளியிட்டிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பா.ஜ.க அரசு, மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோரை தேசிய அளவில் போட்டித் தேர்வு நடத்தி நியமிப்பதற்காக, ‘அகில இந்திய நீதித்துறை தேர்வாணையம்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கவிருப்பதாக முன்பே தகவல் வெளியானது.
இது மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயல் என்றும் மொழிரீதியாக நீதிமன்ற நடவடிக்கைகளைப் பாதிக்கும் எனவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அப்போதே கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இப்போதைய தமிழக அரசின் தேர்வு நடவடிக்கைகள் பா.ஜ.க அரசுக்கு உதவுவதாகவே இருக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் ஒருவர், “அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் பணிக்கு தகுதியானவரைத் தேர்ந்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டதாக அமைய வேண்டும். வினாத்தாள் தயாரிப்பவர்கள் தங்களின் அறிவுப்புலத்தை நிரூபிக்கும் விதமாக கடினமான கேள்விகளைத் தயாரிக்கின்றனர்.
7 ஆண்டுகள் வழக்கறிஞர்களாகப் பணிபுரிந்தவர்கள்தான் மாவட்ட நீதிபதி பணிகளுக்கான தேர்வை எழுதுகிறார்கள். இந்த தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் முறையை ரத்து செய்யவேண்டும். தொடர்ந்து இப்படியே நடந்தால் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறையுமே தவிர, மாவட்ட நீதிபதி காலிப் பணியிடங்களை அரசால் நிரப்பவே முடியாது.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!