Tamilnadu
“கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதித்தது எடப்பாடி அரசின் எதேச்சாதிகாரம்” - வைகோ கடும் கண்டனம்!
தி.மு.க நடத்தும் கிராமசபை கூட்டத்தின் முதல்நாளில் மட்டும் நேரடியாக 30,40,000 மக்கள் பங்கேற்று ‘#அதிமுகவை_நிராகரிக்கிறோம்’ என தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், கிராம சபை கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு பழனிசாமி அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மதிமுக பொதுச்சேயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டுகோள் விடுத்து, பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகின்றன.
இக்கூட்டங்களில் மக்கள் அணி, அணியாக திரண்டு வந்து தங்கள் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். தமிழக அரசின் நிர்வாக அலட்சியத்தால் ஊராட்சிப்பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சுகாதாரம், வீடு கட்டும் திட்டங்கள், சாலைப் பணிகள் போன்றவை பாதிக்கப்பட்டு உள்ளன.
திமுக முன்னின்று நடத்தும் கிராம சபை கூட்டங்கள் மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து வருவதை பொறுக்க முடியாமல் தமிழக அரசு தடை செய்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
ஊராட்சி சட்ட விதிகளைக் காரணம் காட்டி, கிராமசபைக் கூட்டங்களை நடத்த தடை போடும் எடப்பாடி பழனிசாமி அரசு, சட்டப்படி ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் நிதியை பெற்றுத் தரவும், மாநில அரசின் நிதியை வழங்காமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதும் நியாயமா?
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதைத் தடுக்க கடந்த அக்டோபரில் இக்கூட்டங்களை நடத்த தடை போடப்பட்டது. ஆனால் தடைகளைத் தகர்த்து வெற்றிகரமாக கிராம சபை கூட்டங்கள் நடந்தன.
இப்பொழுதும் மக்கள் பெருந்திரள் பங்கேற்புடன் கிராமசபைக் கூட்டங்கள் நடப்பதை தடுக்க அதிமுக அரசால் போடப்படும் தடைகள் நொறுங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!