Tamilnadu
“தி.மு.கவின் வெற்றி மூலம் தமிழகம் சமூகநீதியின் வற்றாத ஊற்று என்பதை உலகறியச் செய்வோம்” - கி.வீரமணி உறுதி!
“மதவெறி மண்ணல்ல தமிழகம், சமூக நீதியின் வற்றாத ஊற்று, வறளாத ஜீவநதி என்பதை உலகறிய 2021 தேர்தல் வெற்றி மூலம் உணர்த்துவோம்” என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு :
பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் உடலால் நம்மை விட்டுப் பிரிந்து 47 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவர் புதைக்கப்பட்டவராக இல்லாத தத்துவத் தலைவரானதால், விதைக்கப்பட்ட வித்தகராகி, வீரியத்துடன் அவ்விதை முன்னிலும் வேகமான வளர்ச்சியைக் காணுகிறோம். உலகத்திற்கே ஒளியூட்டி வழிகாட்டும் லட்சியச் சுடரைப் பலதரப்பட்டவர்களும், பற்பல நாடுகளிலும் ஏந்திக்கொண்டு, தங்களது லட்சியப் பயணத்திற்குத் துணையாய்க் கொள்கின்ற நிலை - பெரியார் என்பது அறிவுப் புரட்சி, சுயமரியாதைப் பாடம் சொல்லி ‘மானமிகு’ பட்டம் கொடுக்கும் ஒரு பகுத்தறிவுப் பல்கலைக்கழகம் என்பதை உலகம் கண்டு வியந்து வருகிறது.
எப்படியாவது அந்த ஆலமரத்தைச் சாய்த்திட காவிகளின் புழுதிப் புயல், சில அரசியல் அடிமைகளின் முதுகில் சவாரி செய்கிறது; மூச்சைப் பறிக்க முனைந்து, மூக்குடைப்பட்டு, வருகிறது. பல வாடகைக் குதிரைகளை சவாரிக்கு அழைத்து களத்தில் நிற்க கச்சை கட்டுகின்றது.
எத்தனையோ சுனாமிகளைக் கண்டு, அசையாமல் நிற்கும் இந்த லட்சியத்தின் ஆணிவேர்பற்றி அறியாத அரசியல் ஆணவக்காரர்களது திட்டம் - மின்மினிப் பூச்சிகளை வைத்து மின்சாரத்தைத் தோற்கடிக்க எண்ணும் பேதமை என்பதை உலகுக்குக் காட்ட உன்னதமான ஓர் அரிய வாய்ப்பு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 மூலம் வருகிறது.
1971-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பெரிய பெரிய தலைவர்களின் கூடா நட்பும், பலரின் இடையறாத விஷமப் பிரச்சாரமும் பலமான புயல்போல் வீசிய நேரத்தில்கூட, திராவிடம் விஸ்வரூபம் கொண்டு எழுந்து, முன்பு எப்போதும் தி.மு.க அணிக்குத் தராத வெற்றியைத் தந்த அந்த வரலாறு திரும்பும் என்று காட்டுவோம்.
‘திராவிடம் வெல்லும்’ என்பதைக் கல்லில் செதுக்க, உறுதியேற்போம்; உழைத்து ஈட்டும் வெற்றியை தி.மு.கவின் மூலம் மதவெறி மண்ணல்ல திராவிடம், தமிழகம் சமூக நீதியின் வற்றாத ஊற்று, வறளாத ஜீவநதி என்பதை உலகறிய உறுதியேற்போம். ஒரே இலக்கு திராவிடம் வெல்லும் - பெரியார் தத்துவம் அதைச் சொல்லும்”
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!