Tamilnadu

“கொள்ளையடித்த பணத்தை கொடுத்து வெற்றி பெறலாம் எனும் அ.தி.மு.க-வினரின் திட்டம் பலிக்காது”: உதயநிதி ஸ்டாலின்

'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பிரச்சார பயணத் திட்டத்தின்படி தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து வருகிறார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

அதன்படி, கடலூர் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகி ராசேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, செய்தியாளர்ளைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி வருகிறார்கள். வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி அகற்றப்படும். அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் ஒரே கட்சிதான்.

கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக கொள்ளையடித்த பணத்தில் இருந்து, வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என அ.தி.மு.கவினர் நினைக்கின்றனர். அது நடக்காது” எனத் தெரிவித்தார்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் தனியாரை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்துப் போராடி வரும் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், “தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கட்டணக் குறைப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என மாணவர்களிடம் உறுதியளித்தார்.

மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மூத்த தொண்டர்களையும், நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்துப் பேசினார் உதயநிதி ஸ்டாலின். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எம்.எல்.ஏ சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தொடர்ந்து புவனகிரி, சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, சோழதரம், திருமுட்டம், பண்ருட்டி என பல்வேறு இடங்களில் மக்களிடையே உரையாற்றினார்.

Also Read: கடலூரில் உதயநிதி ஸ்டாலின்.. அதிமுக ஆட்சியின் இறுதி அத்தியாயத்தை உறுதிபடுத்திய மக்களின் வரவேற்பு! (ALBUM)